'நாட்டில் அசாதாரண சூழ்நிலை'' - 3 பிரதான அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டில் உருவாகியுள்ள அசாதாரண நிலையின்போது முஸ்லிம்கள் மிக நுணுக்கமாகவும், தூர நோக்குடனும் சிந்தித்து செயலாற்றுவது அவசியமாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா, தேசிய சூறா சபை ஆகியன கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளன.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சமூகத்தின் அரசியல் தலைமைத்துவமும் சிவில் தலைமைத்துவமும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
முஸ்லிம்களுக்கும் சிங்கள பெரும்பான்மையினருக்கும் இடையே 1000 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் ஒற்றுமை மற்றும் இன சௌஜன்யத்தைச் சீர்குலைக்கும் நோக்கிலும், நாட்டில் குழப்பத்தை உருவாக்கி வேறு சில இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலும் இந்த அடாவடித்தனங்கள் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதே எமது அபிப்பிராயமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மிக நுணுக்கமாகவும், தூர நோக்குடனும் சிந்தித்து செயலாற்றுவது அவசியமாகும். ஆத்திரம் மற்றும் அவசரப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்வது அவசியமாகும்.
பல்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் தேசிய சூறாக் கவுன்ஸில் ஆகிய முஸ்லிம் சிவில் சமூகத்தின் பிரதான அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்து இந்த நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசுடனும், பாதுகாப்புத் துறையினருடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
பௌத்த கடும்போக்கு அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றபோதும், உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்ட பெரும்பான்மை சிங்கள பௌத்த சகோதரர்கள் இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் சமூகத்தினை அனுதாபத்துடன் நோக்கி, ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளால் ஆத்திரமுற்று, எம்மை ஆதரிக்கும் மிதவாத பெரும்பான்மை சிங்களவர்களை பகைத்துக்கொள்ளும் நிலையேற்படாது சிந்தித்து புத்திசாதுர்யமாக செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் தமது ஜமாஅத்துக்கு உட்பட்டவர்களுக்கு நாட்டின் அசாதாரண சூழ்நிலையை விளக்கி அறிவூட்டுவதற்கு நடவடிக்கையெடுப்பதோடு, பள்ளிவாசல், ஊர், வியாபார தலங்கள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு குறித்தும் அதிக அக்கறையோடு செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் இனங்களுக்கிடையிலான சௌஜன்யமும் உறுதிப்படுத்தப்படுவதற்கு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊடக அறிக்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.றிஸ்வி முப்தி, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என்.எம்.அமீன், தேசிய சூறா கவுன்ஸிலின் தலைவர் தாரிக் மஹ்மூத் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ளனர்.
மாஷா அல்லாஹ் நல்ல ஏட்பாடு
ReplyDelete