உயிரிழப்பு 202 ஆக உயர்வு, சடங்களை தேடி வேட்டை, வெள்ளம் வழிந்தோடியது
நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் இணைந்ததாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 ஆயிரத்து 68 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஆயிரத்து 754 பேர் 383 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அந்தந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த அனர்த்தங்கள் காரணமாக 901 வீடுகள் முற்றாகவும் 6064 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலகங்கள் உறுதி செய்துள்ளன.
அதிகமான உயிரிழப்புக்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 28 காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனைவிட களுத்துறை மாவட்டத்தில் 59 மரணங்களும் மாத்தறை மாவட்டத்தில் 27 மரணங்களும் பதிவாகியுள்ளதுடன் அந்த மாவட்டங்களில் முறையே 53,16 பேர் காணாமல் போயுள்ளனர்.
தெற்கின் காலி, மாத்தறை, மேற்கின் களுத்துறை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ள நீர் பெருமளவு வடிந்தோடி வரும் நிலையில் சில பிரதேசங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியதாக காட்சி அளிக்கின்றன. எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றும் தொடர் மழை பதிவான நிலையில் களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ள நீர் மட்டமும் உயர் வடைந்துள்ளது.
தெற்கில் வெள்ள நீர் வடிந்தோடும் நிலையில் நிவாரணம் மற்றும் தொற்று நோய் தொடர்பில் பெரும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. களுத்துறை காலி, மாத்தறை, மாவட்டங்களில் முப்படையினரும் இணைந்து நிவாரண, மீட்புப் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இரத்தினபுரியின் பல பகுதிகளில் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனைவிட மாத்தறை நில்வளா கங்கையின் நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றது. எனினும் பொது மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்த தமது வீடுகளுக்கு செல்ல தொடர்ந்தும் அச்ச நிலையில் உள்ளனர். குறிப்பாக முதலைகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. நில்வலா கங்கையில் உள்ள முதலைகளே வெள்ள நீரில் இவ்வாறு வீடுகளுக்குள் புகுந்துள்ளமை சுட்டிக்காட்டித்தக்கதாகும்.
குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் காணாமல் போனோரைத் தேடி தேடுதல் நடவடிக்கைகள் முப்படையினரால் மும்முரமாக முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்றன.
Post a Comment