ஜூலை 1 முதல், நெகிழ்வுமுறை வேலை நேரத்திட்டம் நடைமுறை
அரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
கொழும்பு- பத்தரமுல்ல பிரிவில் முதற்கட்டமாக இந்த நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையின் கீழ் பத்தரமுல்ல பிரிவில் உள்ள அரச பணியாளர்கள் காலை 7.30 மணி தொடக்கம், 9.30 மணி வரையான நேரத்துக்குள், எந்த நேரத்திலும் தமது பணிகளை ஆரம்பிக்க முடியும்.
அத்துடன், வேலையை ஆரம்பித்த நேரத்துக்கு ஏற்ப, எட்டு மணிநேரத்தின் பின்னர், பிற்பகல் 3.30 மணி தொடக்கம், 5.30 மணிக்கும் பணிகளை முடித்துக் கொள்ளலாம்.
இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்கே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் சாதக பாதகங்கள் ஆராயப்பட்டு ஏனைய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக சுற்றறிக்கை விரைவில் அரச பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களைப் பாதிக்காத வரையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது வேலை நேர முறைமையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை தனியார் துறையிலும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Post a Comment