முஸ்லிம்கள் மீது புலிகளின் இனச்சுத்திகரிப்பு - கருணாக்கு, பிரபாகரன் தண்டனை வழங்காதது ஏன்..?
-Kalai Marx-
கருணாவை துரோகி என்று சொல்லித் திரியும் புலி ஆதரவு நபர்கள், அதே கருணா செய்த மிகப் பெரிய துரோகத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் முரண்நகையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட சம்பவத்தை தான் இங்கே குறிப்பிடுகிறேன். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவையும், பெரும் பின்னடைவையும் ஏற்படுத்திய சம்பவம் அது.-
சி.ஐ.ஏ. மற்றும் மேற்குலக மனித உரிமை நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளில், அது புலிகளால் நடத்தப் பட்ட இனச் சுத்திகரிப்பு எனத் தவறாமல் குறிப்பிடப் படும். மேலும் சிறிலங்கா அரசு அதை சுட்டிக் காட்டியே அரபு - முஸ்லிம் நாடுகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டது.
சர்வதேச ஊடகங்களுக்கு முன்னால், புலிகளால் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப் படுத்த முடியவில்லை. இறுதியில் அது தம் பக்கத் தவறு என்று ஒத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
உண்மையிலேயே, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் நோக்கம், அன்று புலிகளிடம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் ஏராளமான யாழ்ப்பாண முஸ்லிம் போராளிகளும் புலிகள் அமைப்பில் இருந்தனர். (சரியாண எண்ணிக்கை தெரியவில்லை.) அதே நேரம், அன்று கிழக்கில் இருந்த நிலைமைக்கு மாறாக, வடக்கில் தமிழ் - முஸ்லிம் இன முரண்பாடு எதுவும் இருக்கவில்லை. (தமிழ்ப் பழமைவாதிகளின் முஸ்லிம் வெறுப்பு வேறு விடயம்.)
அன்றைய காலகட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் அரசு ஆதவில் இயங்கிய முஸ்லிம் ஊர்க்காவல் படையினரின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. சில தமிழ்க் கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாகியதும், அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதே நேரம், பழிவாங்கும் நடவடிக்கையாக புலிகள் முஸ்லிம் கிராமங்களை தாக்கி அப்பாவி முஸ்லிம் மக்களை படுகொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.
அந்தக் காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தான் கருணா. ஆகையினால் அன்று நடந்த சம்பவங்களுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப் பட்டவர்.
அன்று புலிகளின் தலைமையகம் இருந்த யாழ்ப்பாணத்திற்கு சென்ற கருணா, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அடாவடித்தனம் பற்றி முறையிட்டுள்ளார். கருணாவின் தூண்டுதலின் பெயரில் தான் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டதாக சொல்லப் படுகின்றது.
யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றம், புலிகள் அமைப்பின் மீது தீராக் களங்கத்தை உண்டாக்கி விட்டிருந்தது. சர்வதேச கண்டனங்களையும் சம்பாதித்திருந்தது. அது புலிகளின் தலைமைக்கும் தெரியும். இருப்பினும் அந்த களங்கத்தை உண்டாக்கிய கருணா தண்டிக்கப் படவில்லை.
இது போன்ற சந்தர்ப்பங்களில் சம்பந்தப் பட்ட நபர் துரோகியாக்கப் பட்டு தண்டிக்கப் பட்ட சம்பவங்கள் பிற விடுதலை இயக்கங்களில் நடந்துள்ளன. ஆனால் புலிகள் இயக்கம் மட்டும் கருணாவை தொடர்ந்தும் தளபதியாக வைத்துக் கொண்டிருந்தது.
பேச்சுவார்த்தை காலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த நேரத்திலும் கருணா தலைவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அன்டன் பாலசிங்கம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் கருணா வாயே திறக்கவில்லை. அது மட்டுமல்ல, அந்தப் படத்தை பிரசுரித்து "கருணாவை கவனித்துக் கொள்ளுங்கள்..." என்று இந்திய சஞ்சிகை Frontline தலைப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தது.
அப்போதே இலங்கை, இந்திய அரசுக்கள் மட்டுமல்ல, நோர்வே போன்ற சர்வதேச அனுசரணையாளர்களும் கருணாவை குறி வைத்து விட்டிருந்தனர். புலிகள் சமாதான ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க மறுத்தால், கருணாவை வைத்து இயக்கத்திற்குள் பிளவு உண்டாக்க திட்டமிடப் பட்டது. இதற்குப் பின்னர் நடந்தவை அனைவரும் அறிந்த வரலாறாகி விட்டது.
Post a Comment