பேரினவாதத்தால் பந்தாடப்படும் முசலியை மீட்க, முஸ்லிம்கள் எழ வேண்டும்!
-எஸ். ஹமீத்-
பரிதாபத்துக்குரிய ஒரு பிரதேசம் பேரினவாதத்தால் இன்று பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது....!
அகதிகளாகி 27 வருடங்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்து திரிந்த மக்களை நிரந்தர அனாதைகளாக்கும் பெரும்பான்மையினத் துவேஷம் இன்று பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது...!
பரிதாபத்திற்குரிய நமது சகோதரர்களின் சொந்த பூமியைப் பிடுங்கி விலங்குகளை வாழ வைக்கும் முயற்சிகள் இன்று விஸ்வரூபமடைந்திருக்கின்றன...!
புலிகளினால் விரட்டப்பட்டபோது அனைத்தும் இழந்த அப்பாவி முஸ்லிம்களின் சொந்த நிலங்களை இன்று 'சிங்கங்கள்' கபளீகரம் செய்து கர்ஜனை புரிகின்றன...!
கபடத்தனமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலினால் காவு கொள்ளப்பட்டுள்ளன நம்மவர்களின் சொந்தக் காணிகள்...!
தம் வீட்டை மூடிக்கிடந்த பற்றைகளைச் சுத்தம் செய்தோர் மீது வில்பத்துவுக்குச் சொந்தமான காட்டை அழித்ததாகக் கடும் தொனியில் குற்றம் சுமத்தப்படுகிறது...! பால் குடிக்கவொரு குவளை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, படுத்துறங்கவொரு குடிசையையாவது கட்டிக் கொள்வோம் என்று நினைத்த ஏழைகளின் நெஞ்சங்களில் நெருப்பையள்ளிக் கொட்டியிருக்கிறது, நாமே முயன்று கொண்டுவந்த இந்த நல்லாட்சி...!
மனித நேயமிக்கவர் என்று நாம் மார்தட்டி முழக்கமிட்ட நமது ஜனாதிபதி இன்று மிருக நேயங்களுக்கே மிகுந்த முக்கியத்துவமளித்திருக்கிறார்...! மனிதர்கள் வாழ்வதற்கு வீடுகள் இல்லாவிட்டாலும் கவலையில்லை, மரங்கள் வளர்வதற்குக் காடுகள் அவசியம் என்று சொல்லாமற் சொல்லி மனித முகங்கள் மீது காறி உமிழ்ந்திருக்கிறது நாம் அரியணையில் ஏற்றி வைத்த இந்த அரசாங்கம்...!
இந்த அக்கிரமத்துக்கெதிராக இலங்கை முஸ்லிம்கள் வெகுண்டெழ வேண்டிய தேவையிருக்கிறது. கட்சி, கொள்கை, இயக்க, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் அப்பாவிகளான நமது சகோதர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொடுமைக்கெதிராக நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது. பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்க்காமல் நம் மக்களின் உரிமையைக் காப்பாற்றப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.
ஓர் அலுத்கம அநியாயத்திற்கெதிராக அகில இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் எல்லா வேற்றுமைகளையும் எடுத்தெறிந்துவிட்டு எவ்விதம் எழுந்தார்களோ, அந்த ஆவேச எழுச்சியை இப்போதும் நிகழ்த்திக் காட்ட வேண்டியிருக்கிறது. முசலி மண்ணைக் காப்பாற்ற 'முஸ்லிம்கள்' என்ற ஒற்றைக் கொடியின் கீழ் ஒன்றுபட வேண்டியிருக்கிறது.
கோட்டையைப் பிடிப்பதொன்றே குறிக்கோள் என்றிருந்தவர்கள் கோட்டையைப் பிடித்ததும் நம்மீது சேட்டைவிடத் தொடங்கியிருக்கிறார்கள். நமது செட்டைகளை வெட்டி நம் சமூகத்தைச் சீரழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் கொட்டமடக்கிக் காட்டும் வல்லமை நமக்கிருக்கின்றதென்பதை நமது ஒன்றிணைந்த செயற்பாடுகளின் மூலம் உரத்துச் சொல்வோம்.
சாவா, வாழ்வா என்ற நிலையில் நமது சகோதரர்கள் பரிதவிக்குமிந்த நிலையில், அரசாங்கத்துடன் சமரசமாகப் பேசி அம்மக்களின் இருப்பைச் சாத்தியமாக்க முற்படுவோம். சாதகமான பதிலின்றேல் நமது ஒற்றுமையின் சக்தியை வெளிப்படுத்துவோம். சாதித்துக் காட்டுவோம்.
எல்லா வழிகளிலும் அல்லாஹ் நமது சமூகத்துக்கு வெற்றியைத் தந்தருள்வானாக; ஆமீன்!
Post a Comment