தமிழ் - முஸ்லிம்களது விழுமியங்களைச் சீரழிக்கும், எந்த அபிவிருத்தியையும் அங்கீகரிக்க முடியாது
வடக்கு மற்றும் கிழக்கில் மதுபானத் தொழிற்சாலைகளை நிறுவி அதன் மூலம் யுத்தத்தால் சரிந்து போன சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை நிமிர்த்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று அவரிடம் வினவியபோதே இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம் மக்களது சமூக கலாச்சார விழுமியங்களைச் சீரழிக்கும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது. தொழில் வாய்ப்பு என்று கூறிக் கொண்டு சமூகம் அழியக்கூடிய மறைமுக நிகழ்ச்சி நிரல்களை நாம் அனுமதிக்கவே மாட்டோம். உன்னிப்பாகக் கவனித்து அதனை தடுத்து நிறுத்துவோம்.
கடந்த 30 வருட காலத்தில் அத்தனை பொருளாதாரமும் வாழ்வும் வளமும் அளிக்கப்பட்ட தமிழ் பேசும் சிறுபான்மையினரின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டாது மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது இன்னமும் இந்த சிறுபான்மை இனங்களை அழிக்க வேண்டும் என்ற மறைமுக நிகழ்ச்சி நிரல் செயற்பாட்டில் உள்ளது என்பதையே காட்டுகின்றது. உல்லாச பொழுது போக்கிற்கு உலகப் புகழ்பெற்ற பாசிக்குடாவிலுள்ள உல்லாசப் பயண விடுதிகள் எவையும் சிறுபான்மை இனங்களுக்குச் சொந்தமானதாக இல்லாதிருப்பது ஒரு புறமிருக்க அங்கே வேலைவாய்ப்புக்களிலும் சிறுபான்மையினர் இல்லை.
விரல் விட்டு எண்ணக் கூடியளவில் அங்கு வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் ஒருசில சிறுபான்மையினருக்கும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து அவர்களாகவே வெளியேறச் செய்யும் நடவடிக்கையில் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் செயற்படுகின்றனர். அந்த வெற்றிடங்களை தென்பகுதிப் பெரும்பான்மையினரைக் கொண்டு வந்து நிரப்புகின்றனர். உற்பத்தித் தொழிற்சாலைகள், தொழிற்துறை வலயங்கள் அமைந்துள்ள அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 60 வீதமானவர்கள் வேலைவாய்ப்பைப் பெறவழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்ற நியதியைப் புறந்தள்ளி விட்டு ஒட்டுமொத்தமாக பெரும்பான்மையினருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் இடங்களாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. இது ஒரு அநீதி.
வடக்கு கிழக்கிலுள்ள உல்லாச விடுதிகள் மற்றமுள்ள வேலைவாய்ப்பு இடங்களில், தொழிற்சாலைகளில் கடமைக்காக நியமிக்கப்பட்டிருக்கும் காவலாளிகள் கூட ஓய்வு பெற்ற பெரும்பான்மையின படை வீரர்களாகவும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களெல்லாம் நாளடைவில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாக்காளர் இடாப்புக்களில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்வர். இது ஒரு திட்டமிட்ட அரசியல் முன்னேற்பாடு. வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அழித்தொழிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரல் இது.
அரசாங்கம் தொழில் வாய்ப்புக்காக உற்பத்திச் சாலைகளை நிர்மாணிப்பதற்காக காணிகளைக் கையகப்படுத்துகிறது. அப்படியானால் ஏற்கெனவே வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் தூர்ந்து போயிருக்கும் தொழிற்சாலைகளை ஏன் மீளத் திறக்க முடியாது. இந்தத் தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கானோருக்கு தொழில்வாய்ப்பையும் நாட்டுக்கு பெருத்த பொருளாதார இலாபத்தையும் ஈட்டித் தந்தன. வாழைச்சேனை கடதாசி ஆலையை அரசாங்கம் ஏன் கண்டு கொள்ளவில்லை? அதனை மீள இயக்கினால் ஆயிரக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் தொழில் வாய்ப்பைப் பெறுவர்.
அதன் மூலம் அவர்களது குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் வாழ்க்கையும் மலர்வதோடு பிரதேசமும் வளம் பெறும். இதைப் பற்றி அரசு அக்கறை எடுக்காமல் ஐக்கிய தேசியக் கட்சியின் மறைமுக நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களை போதைப்பொருள் வலயமாக மாற்றுவது கொண்டு அந்த மக்களின் வாழ்க்கையையும் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் சீரழிக்க மறைமுக நிகழ்ச்சி நிரல் உள்ளது.
அதன் ஒரு கட்டமாகத்தான் வடக்கு கிழக்கில் மதுபானத்தொழிற்சாலைகள், மதுபானசாலைகள், நிரம்பி வழிகின்றன. கஞ்சா விற்பனை இடம்பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் அமைப்பாக சிவில் சமூகம் ஒருபோதும் இருக்கக் கூடாது. பின்புலத்தோடு அரசியல் எதிர்பார்ப்போடு அதற்கான நிகழ்ச்சி நிரல்களோடு சிறுபான்மை மக்களின் மண்ணில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நாம் சிவில் சமூக பலத்தோடு எதிர்ப்போம் என சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
Post a Comment