Header Ads



மதுபான உற்பத்தித் தொழிற்சாலையை நிறுத்த கோரும் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு- கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற  மதுபான உற்பத்தித் தொழிற்சாலையை நிரந்தரமாக நிறுத்துமாறு அரசினைக் கோரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியி(NFGG)னால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது நாளை (7.4.2017) வெள்ளிக்கிழமை பி.ப. 1.15 மணிக்கு மட்டக்களப்பு காந்தி சிலை முன்பாக நடைபெறவுள்ளது

இது தொடர்பில் NFGG வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற மதுபான உற்பத்தித் தொழிற்சாலை இப்பிரதேசத்தில் வாழ்கின்ற தழிம், முஸ்லிம் சமூகங்களின் வாழ்வியலில் வேண்டத்தகாத மாற்றங்களை உண்டு பண்ணுவது மட்டுமின்றி ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையிலும் சமூக, பொருளாதார ரீதியான  சீரழிவுகளை உண்டு பண்ணும். 

ஏற்கனவே மதுபானத்திற்கு அடிமையான கூடுதல் எண்ணிக்கையுள்ளவர்களைக் கொண்ட மாவட்டமென்ற அவப்பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற எமது மாவட்டம் இன்னுமின்னும் சீரழிய இத் தொழிற்சாலை வழிவகுக்கும். 

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வேண்டுமென பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இச்சுசூழலில் இவ்வாறான நடவடிக்கைகள் எமது எதிர்கால சந்ததியினரை திட்டமிட்டு நெறிபுரளச் செய்து அழித்து விடுவதற்காகவென்றே செய்யப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றது.  

நல்லாட்சிக் கோசத்தோடு ஆட்சிபீடமேறிய அரசின் பூரண அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறியப்படுகின்ற இத்தொழிற்சாலை எமது வாக்குகளையே பெற்று ஆட்சிபீடமேறி எம்மையே  ஏமாற்றுகின்ற ஒரு முயற்சியா என்றும் எண்ணத் தோன்றுகின்றது. 

இவ்வாறான சமுகத் தீமையொன்றுக்கெதிராக எமது எதிர்ப்பை அரசிற்குக் காட்டுவற்காக எமது இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 7.4.2017 வெள்ளிக்கிழமை பி.ப. 1.15 மணிக்கு மட்டக்களப்பு காந்தி சிலை முன்பாக நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு எமது சமுகங்களின் வாழ்வியலை பாதுகாப்பதற்கு பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.