Header Ads



'இனியும் பொறுமையாக இருக்க முடியாது' UPFA

நிறைவேற்று ஜனாதிபதி முறை அடங்கலான சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவுக்கு வழங்க இருப்பதாக ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டு நலனுக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க தயார் என்று குறிப்பிட்ட அவர், யாப்பு திருத்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளின் நகர்வுக்கேற்ப இது முடிவாகும் எனவும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு  கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் யாப்புத் திருத்தம் என்பன தொடர்பான சு.க நிலைப்பாடு குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக ஒழிக்கக் கூடாது என்பதோடு சர்வஜனவாக்கெடுப்பிற்கு செல்லாத திருத்தங்களே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சு.க வின் நிலைப்பாடாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். ஆனால் அவர் கூறுவதோ நான் சொல்வதோ அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. ஜனாதிபதி சொல்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அவர் அரசின் நிலைப்பாட்டை வெளியிடுவார்.

சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாத விடயங்களை மட்டுமே மேற்கொள்வதாக ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு தயாரிப்பதற்கான குழு பல்வேறு யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.எனவே நாம் அவசரப்படத் தேவையில்லை. குழு நாட்டுக்கு உகந்த முடிவுகளை எடுக்கும். எமது நிலைப்பாட்டையும் அதற்கு வழங்க இருக்கிறோம். ஏனைய தரப்பினருடனும் பேசி தேவையான முடிவுகளை எடுக்க முடியும். இங்கு எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப நாட்டு நலனுக்காக எமது நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்க தயாராக இருக்கிறோம்.ஒரளவு அதிகாரப்பகிர்வு வழங்குவதோடு சகல மக்களும் சமாதானமாக வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

புதிய அரசியலமைப்பே உருவாக்கப்படும் எனவும் அதில் ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் எனவும் ஐ.தே.க அமைச்சர்கள் கூறிவரும் நிலையில் யாப்பு திருத்தமே இடம்பெறும் எனவும் ஜனாதிபதி முறை ஒழிக்கப்படாது எனவும் சு.க அமைச்சர்கள் கூறிவருகின்றனர். சு.க காலக்கெடு எடுத்து வரும் நிலையிலே யாப்பு திருத்த பணிகள் தாமதமடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறி வருகிறது.

கூட்டு எதிரணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அக்கட்சி விரைவில் பிளவுபடும் எனத் தெரிவித்தார்.

நாம் இனியும் பொறுமையாக இருக்க முடியாது. அவர்கள் தனித்துப் போட்டியிட தீர்மானித்தால் நாங்களும் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும்.

ஜனநாயக உணர்வின் அடிப்படையிலேயே ஜனாதிபதி கூட்டு எதிரணியை எதிர்க் கட்சி வரிசையில் அமர அனுமதித்தார்.

கட்சியை உடைக்கும் எண்ணத்தில் அல்ல. அவர்கள் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்டார்கள். வழமையாக கட்சிகள் தமது தலைவர்களையோ அமைச்சர்களையோ விமர்சிக்க உறுப்பினர்களை அனுமதிப்பதில்லை. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அதை அனுமதித்தது, ஒரு வருடத்துக்கு முன்பு, தனிக் கட்சி ஒன்று உதயமாகும் என நாள் எதிர்வு கூறினேன். நான் கூறியது சரி.

எமது கட்சி மிக நன்றாக முன்னேறுகிறது. அதற்கு பெரும் ஆதரவு உண்டு என்பதை நாம் கண்டிருக்கிறோம். எல்லோரும் நேர்முக தேர்வுக்கு வருவதற்கு நாம் வாய்ப்பளித்திருக்கிறோம்.

நேர்முக தேர்வு 95 வீதம் முடிவடைந்து விட்டது. அவர்கள் தமது சொந்த அணியைக் களமிறக்கினால் என்ன நடக்குமென நினைத்துப்பாருங்கள்.

ஷம்ஸ் பாஹிம் 

1 comment:

  1. We hear these again and again, if there is a election. Good luck to people.

    ReplyDelete

Powered by Blogger.