Header Ads



கற்களாக மாறிய மனிதர்கள்


-ரஹ்மத் ராஜகுமாரன்-   

 அந்த கால மாயஜால படங்கலை பார்த்திருக்கிறீர்களா? மனிதனைக் கல்லாக மாற்றும் காட்சிகள் சர்வ சாதாரணமாக வரும். நிஜமாகவே மனிதர்களை கல்லாக மாற்ற முடியுமா...? இந்த கேள்வி பழைய படங்களை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம்.

முடியாது. நிச்சயமாக மனிதர்களை கல்லாக மாற்ற முடியாது. காரணம், மனிதனின் உடல் முழுவதும் அமினோ ஆக்ஸைடுகளால் உருவானது. கல், பாறைகள் சிலிக்கான் என்கிற மணற் துகள்களால் வெப்பத்தாலும், மிகுந்த அழுத்தத்தாலும் பாறைகள் கற்கள் உருவாகின்றன. அப்படியிருக்க மனிதன் எவ்வாறு கல்லாக மாற முடியும்...? என்பதாக விஞ்ஞானம் வேதியல் விஞ்ஞானப்படி மறுதளிக்கும். ஆனால், இயற்கையின் பேரழிவு மனிதர்களைக் கல்லாக மாற்றிய சம்பவம் இந்த உலகில் நடந்திருக்கிறது.

இத்தாலியில் பாம்பெய், ஹெர்குலானியம் என இரு அழகான நகரங்கள் இருந்தன. இரு நகரங்களுக்கும் அருகே மவுண்ட் வெசுவியல் என்கிற எரிமலை இருந்தது. அமைதியாக தூங்கிக்கொண்டிருந்த எரிமலை கி.பி. 78 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன் சுயரூபத்தைக் காட்டியது. அப்போது விடுமுறைக் காலம் என்பதால் பொதுமக்கள் விடுமுறையை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருந்தனர். திடீரென எரிமலை வெடித்துச் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பெய், ஹெர்குலானியம் ஆகிய இரு நகரமெங்கும் புகை மயம். நெருப்புக் குழம்பு ஊரெங்கும் வழிந்தோடியது.

இந்தக் கோரச்சம்பவத்தில் மக்கள் என்ன ஆனார்கள்? என்று கூடத் தெரியாத அளவுக்கு நெருப்புக் குழம்பில் சிக்கி மண்மேடாகினர். ஒரு ஒரு காலக்கட்டத்தில் இரு நகரங்களையும் இத்தாலி நாட்டு மக்கள் மறந்தே விட்டனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு சம்பவத்தைக் கேள்விப்பட்ட கட்டடக்கலை நிபுணர்கள், ஹெர்குலானியம் வந்தனர். புதைந்திருந்த பாம்பெய், ஹெர்குலானியம் ஆகிய இரு நகரங்களையும் 1738 ஆம் ஆண்டு முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தனர்.

ஆய்வில் சுமார் 12 அடுக்குகளாக மண்படிவங்கள் இரு நகரங்களையும் மூடி மறைத்திருந்ததை கண்டறிந்தனர். மண்படிவங்களை கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தி பார்த்தபோது மனிதர்கள். குழந்தைகள், பெண்கள், விலங்குகள் என எல்லோர் மீதும் நெருப்புக் குழம்பு பாய்ந்ததில், அனைவரும் கல்லாகவே மாறி இருந்தனர்.

பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்ட கல் மனிதர்கள் அந்நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இப்படியொரு சோகமான வரலாற்றுப் பின்னணி கொண்ட அந்த இரு நகரங்களும் இப்போது முக்கிய சுற்றுலாத் தலங்களாக மாறிவிட்டன. மரணித்தவர்கள் மீண்டும் உயிர்பெற்றெழும்புவார்கள் என்ற மரணத்துக்குப்பின்னுள்ள வாழ்க்கையைக் குறித்து மக்காவிலுள்ள முஷ்ரிக்கு(இணைவைப்பாளர்)களுக்கு நம்பிக்கை இல்லை.


"நாம் இறந்து எலும்பாகி உக்கி, மக்கிப் போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப் படுவோமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்." (அல்-குர்ஆன் 17:49)

இது அவர்களது அவநம்பிக்கையின் உச்சத்தைக் காட்டுகிறது. அதாவது மரணித்த பிறகு உடல் இருந்தாலும் ஒரு வேளை உயிர் பெறக்கூடும் என்ற நம்பிக்கை உண்டாகலாம். உடல் அழிந்து எலும்பாகி, அவ்வெலும்புகளும் மக்கிப் போன பிறகு உயிர்பெற்றெழும்புவது எண்ணிப்பார்க்க முடியாத காரியம் என்பது அவர்களது கருத்து. எனவே, மேற்கண்ட வசனத்தை தொடர்ந்து இறைவன்,

"அதற்கு நபியே! நீங்கள் கூறுங்கள்; நீங்கள் உக்கி, மக்கி மாண்ணாவது என்ன? கல்லாகவோ, இரும்பாகவோ ஆகி விடுங்கள்" (அல்-குர்ஆன் 17:50)

கற்கள், இரும்பு போன்றவற்றிற்கு உயிர் இல்லை என்பது பொது மக்கள் கருத்தாக இருப்பதால் அவற்றைக் கூறி உயிர் இல்லாததென நீங்கள் கருதுகிற கல்லாகவோ, இரும்பாகவோ நீங்கள் ஆகி விடுங்கள். அப்படி நீங்கள் ஆனாலும் உங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் என்பதாக மேற்கண்ட வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். மரணத்திற்குப் பிறகு உயிர்த்தெழுப்பப்படும் என்பதை உர்ஜிதப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட உவமானமாகத் தான் நாம் இதுவரை கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள் என்ற வசனத்தை உதாரணமகாக எடுத்துக் கொண்டோம்.

ஆனால், மேற்கண்ட சம்பவத்தில் இத்தாலியிலுள்ள பாம்பெய், ஹெர்குலானியம் ஆகிய இரு நகர மக்களை உண்மையாகவே கல்லாக மாற்றியிருப்பது சற்று நம்மை பயம் கலந்த வியப்போடு உற்று நோக்க வைக்கிறது. சரி! மனிதர்களை கல்லாக மாற்றியிருப்பதை இத்தாலியில் இப்போது கண்டோம். அடுத்து எந்த நாட்டு மக்களை எங்கு எப்போது இரும்பாக இறைவன் மாற்றியிருக்கிறானா...? என்கிற கேள்வியோடு உலகத்தின் நிகழ்வுகளை கவனிக்க வேண்டியது இருக்கிறது.

யா அல்லாஹ்!
நீயே மன்னிப்பவன்!
நீயோ கருணையாளன்!
மன்னிப்பையும், கருணையையும் இந்த உலகத்தில் வேறு எங்கு நாங்கள் எதிர்பார்க்க முடியும்? உன்னைத்தவிர!

"குர்ஆனின் குரல்" மாத இதழ்

No comments

Powered by Blogger.