Header Ads



தாய் தந்தையரின் சிறப்புகள்

ஸஹிஹுல் புஹாரி 2333.வது ஹதீஸ். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர் பாராதவிதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், 'நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக - துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்' என்று பேசிக் கொண்டனர். 
அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்; 
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன். வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலைமாட்டில் நின்று கொண்டேன். என் (தாய் தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந்தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாகிவிட்டது. நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே செய்திருக்கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம். 
அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள். 
மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்: 
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி - முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரண்டு கால்களுக்கும் இடையே அமர்ந்தபோது அவள், 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே' என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக! 
உடனே, பாறை இன்னும் சற்று விலகியது. 
மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்: 
இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், 'என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு' என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். (அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எதுவரையென்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, 'அல்லாஹ்வுக்கு அஞ்சு' என்று கூறினார். நான் அவரிடம், 'அந்த மாடுகளிடமும் இடையர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்' என்றேன். அதற்கு அம்மனிதர், 'அல்லாஹ்வுக்கு அஞ்சு என்னைப் பரிகாசம் செய்யாதே' என்று கூறினார். நான், 'உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள்ளு என்று பதிலளித்தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக! 
(இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான். 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்

No comments

Powered by Blogger.