மன்னர் சல்மானுக்கு கௌரவ கலாநிதி பட்டம், முஸ்லிம் நாடுகளின் பாரிய சவால் தீவிரவாதம் என்கிறார்
முஸ்லிம் உலகம் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள தீவிரவாதம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் நாடுகள் ஒற்றுமைப்பட வேண்டும் என சவூதி அரேபிய மன்னர் சல்மான் அழைப்புவிடுத்துள்ளார்.
தனது ஆசிய விஜயத்தின் முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை மலேசியாவை வந்தடைந்த அவர், மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கமைய முஸ்லிம் நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன. இவற்றை வென்றெடுக்க நாம் ஒற்றுமைப்பட வேண்டியது அவசியமாகும்.
இன்று இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையையும் அதன் நவீனத்தையும் மழுங்கடிக்கும் வகையில் அதற்கெதிராக பாரிய பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை நாம் முறியடிக்க வேண்டும். அத்துடன் முஸ்லிம் நாடுகள் எதிர்கொண்டுள்ள பாரிய சவால் தீவிரவாதமாகும். இதனை முறியடிப்பதில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்பட வேண்டும் என்றும் மன்னர் சல்மான் அழைப்பு விடுத்தார்.
மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மன்னர் சல்மானுக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னர் சல்மான் ஆசியாவுக்கான தனது ஒரு மாத கால விஜயத்தில் மலேசியா, இந்தோனேசியா, புரூணே, ஜப்பான், சீனா, மாலைதீவு ஆகிய ஆறு நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்.
நாடு திரும்பும் வழியில் அவர் ஜோர்தானுக்கும் பயணிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயே மன்னரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
மன்னருடனான விஜயத்தில் 10 அமைச்சர்கள், 25 இளவரசர்கள், 110 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சேவகர்கள் அடங்கலாக 1500 பேர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடிவெள்ளி
விடிவெள்ளி
Post a Comment