பரபரப்பான சூழ்நிலையில் SLMC உயர்பீடம் நாளை, பஷீரும் போகிறார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம், கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், நாளை (04) கூடவுள்ளது. இந்த உயர்பீடக் கூட்டத்தில், பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக, உள்ளகத் தகவல்கள் தெரிவித்தன.
விசேடமாக, எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் அறிக்கை தொடர்பிலும், இதன்போது ஆராயப்பட இருப்பதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை, கொழும்பிலுள்ள தலைமையகமான தாருஸ்ஸலாமில் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி கூடிய உயர்பீடக் கூட்டத்தில், பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் குறித்து ஆராயப்பட்டு, இறுதி முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக, முன்னர் கூறப்பட்ட போதும், இன்றுவரையிலும் அவருக்கு, அப்பதவி வழங்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பிலும் இந்த உயர்பீடத்தில் ஆராயப்படுமென்று, அத் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் இந்த உயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
“1981ஆம் ஆண்டு தொடங்கிய எனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற, மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. பிரதிநிதித்துவ அரசியல் முறையிலிருந்து விலகுவதுடன், இனி எந்தவொரு கட்சியிலும் தேசியப்பட்டியலின் மூலமோ, எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் நாடாளுமன்றத்துக்கோ, மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாகச் செல்லப்போவதில்லை” என, கடந்த 20ஆம் திகதி, பஷீர் சேகுதாவூத் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment