SLMC செயலாளர், ராஜினாமா செய்ய வேண்டும் - பஷீர்
-ஏ.பி.எம் அஸ்ஹர்-
மன்சூர் ஏ காதர் அதிகாரமற்ற செயலாளர் பதவியை இராஜினாமச் செய்ய வேண்டும் என பஷிர் சேகு தாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார்
நான் ஏழாம் ஆண்டில் கல்வி கற்ற போது எனக்கு ஒரு மௌலவி ஆசிரியர் இஸ்லாம் பாடம் கற்பித்தார்.அவர் உலகம் அழியும் முன்னும், மீண்டும் எழுப்பப்படும் முன்பும் "சூர்" எனும் ஊதுகுழல் இஸ்ராபீல் (அலை) இனால் ஊதப்படும் என்று கூறியிருந்தார்.மேலும் 'இரண்டுக்குப்' போய் சுத்தம் செய்யும் போது "வழுவழுப்பு நீங்கி விறுவிறுப்பு வரும் வரை கழுவ வேண்டும்" என்றும் ஆலோசனை கூறிப் பாடம் எடுத்துள்ளார். நமது கட்சியின் இன்றைய நிலவரத்தில் இவ்விரண்டு விடயங்களும் மீள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
நண்பர் மன்சூர் ஏ காதர் மிகவும் நல்லவர், தெரிந்த வரை ஒழுக்க சீலர், கட்சியின் அசைக்க முடியாத பற்றாளர், சிறந்த கல்விமான் என்பதில் எனக்கு ஒரு துளியும் சந்தேகமில்லை. ஆனால் இவர் தற்போதைய கட்சியின் கள நிலையையும், தனது வகிபாகத்தையும் கருத்தில் எடுத்து சுய விமர்சன ரீதியாக முடிவுகளை எடுத்து தன்னைக் கவரிமான் என நிரூபிக்கும் காலக் கட்டாயத்தில் இருக்கிறார்.
மன்சூரை அவர் உச்ச பீட செயலாளராகப் பொறுப்பெடுத்த சில நாட்களில் பிரதித் தலைவர் யூ.ரி.எம் அன்வரின் வணிகக் காரியாயாலயத்தில் தற்செயலாக எனக்கு சந்திக்கக் கிடைத்தது.அப்போது அவரிடம் நீங்கள் உங்களது இவ்வளவு கால கட்சிப் பங்களிப்பையும் உங்கள் சமூக அந்தஸ்தையும் கருத்தில் எடுத்து "சம்பளம் பெற்றுக் கொண்டு கட்சிப் பணியாற்ற முடியாது" என்று தலைவருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு இராஜினாமாச் செய்வது உங்களது அரசியல் அந்தஸ்தையும், சொந்த கௌரவத்தையும் பாதுகாக்கும் என்று அன்புடன் எடுத்துக் கூறினேன்.அவர் என்மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தவராக இருந்த போதும் எனது ஆலோசனைக்கு செவி சாய்க்கவில்லை.
இந்த பகிரங்கப் பதிவின் மூலம் மீண்டும் அவரிடம் நீங்கள் இராஜினாமாவைச் செய்து அவரது சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று வினயமாக வேண்டுகிறேன். ஏனெனில் 2015 ஆம் ஆண்டைய கட்சி யாப்புத் திருதத்தை விட இவ்வருட திருதங்கள் மிகவும் ஆபத்தானவை ஆகும்.
கட்சியின் பிராந்தியச் சமநிலை பேணும் செயலாளர் நாயகம் பதவி இல்லாமலாக்கப்பட்டு கட்சிக்கு மிகப் பெரிய வாக்கு வங்கி உள்ள கிழக்கு மாகாணத்தின் சம பங்கு இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது, கட்சியின் உருவாக்கத்திலும்- வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய சகோதரர் ஹஸன் அலி உருவி எறியப்பட்டுள்ளார், தனி நபர் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டு உச்ச பீடம் பூசாரியின் பலி பீடமாக்கப்பட்டுள்ளது, உச்ச பீட உறுப்பினர்கள் பலியாடுகளாக ஆக்கப்பட்டுள்ளனர், நிறுவுனர் தலைவரின் கொள்கைகள் கொலை செய்யப்பட்டுள்ளது.
எல்லா மீறல்களுக்கும் தலையாய மீறலாக யாப்பு மாற்றத்தில் யாப்பே மீறப் பட்டுள்ளது. அதாவது தலைவர் 2010 இல் இருந்து 2015 இல் திருத்தப்பட்ட யாப்பு வரை தொடர்ந்திருந்து பல நேர்மையற்ற சரத்துகள் மாற்றப்பட்டும் சேர்க்ப்பட்டும் உள்ளன.
கட்சியின் இன்றைய யாப்பின் 14 ஆவது அத்தியாயத்தின் முதலாவது சரத்தில், கட்சி உடமைகளின் உறுதி- அல்லது உடமைகளுக்கு உரிமை வழங்கும் மற்றைய ஆவணங்கள் என்பன கீழ்க் குறிப்பிட்ட ஐந்து கட்சியின் பதவி நிலை உறுப்பினர்களின் தனிப்பட்ட பெயருக்கு பதவி நிலை காரணமாக உரித்துடமையாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்சரத்து பெருத்தலைவர் காலத்தில் இருந்து காணப்படுகிறது. தலைவர், தவிசாளர், செயலாளர் நாயகம், தேசிய அமைப்பாளர், பொதுப் பொருளாளர் ஆகியோரே மேற்குறிப்பிட்ட ஐவருமாகும்.இச்சரத்தில் மாற்றங்கள் மேற் கொள்ளாது கடந்த 11 ஆம் திகதி இடம் பெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் என்ற பதவி இல்லாமல் செய்யப்பட்டு பொதுப் பொருளாளர் வெறும் பொருளாளர் என்று மாற்றம் செய்யப்பட்டு, 12 ஆம் திகதி இடம் பெற்ற பேராளர் மாநாட்டில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.எனவே இவ்வாறு பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை யாப்பை மீறிய யாப்பு மாற்றமாகும். ஆகவே கட்சி யாப்பின் செல்லுபடித் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. கட்டாய உச்சபீடக்கூட்டம், பேராளர் மாநாடு ஆகியவற்றின் வீடியோ பதிவுகள் பலரிடம் இருக்கின்றன.
இப்பதவி நிலை மாற்றம் ஏற்கனவே கேள்விக்குறி ஆகியுள்ள கட்சிச் சொத்துக்களின் உரிமையை மேலும் சட்டச் சிக்கலுக்குள் நிறுத்துகிறது. இதுமட்டுமல்ல கட்சிச் சொத்துக்கள் கடந்தகாலங்களில் இவ்வாறுதான் ஏமாற்றி சட்டச் சிக்கலுக்குட்படுத்தி, போராளிகளுக்கு இருட்டடிப்புச் செய்து முகவர்களால் அனுபவிக்கப்பட்டது என்பதையும் நிரூபிக்கிறது. இது மட்டுமல்ல நசீர் அஹமட்டிடம் இருந்து மீட்டெடுத்த தாறுஸ்ஸலாம் வெற்றுக் காணி உறுதியும் மேற் சொன்ன ஐவரின் பெயரில்தான் எழுதப்பட்டுள்ளது. பதவி நிலைகளில் செய்யப்பட்ட மாற்றம், இந்த கட்சிச் சொத்தின் உரிமையையும் தனி நபர்கள் பறித்தெடுக்கும் நோக்கம் கொண்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்புத்துகிறது.
2015 இல் யாப்பு மாற்றப்பட்ட போது ஒரு கட்சிக்கு இரு செயலாளர்கள் இருப்பது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் தலைவர் செவிசாய்க்கும் சட்டவல்லுனர் சல்மான் அதனைச் சட்ட முதுமானியான தனது தலைவருக்கு மறைத்திருந்தார். இதனால்தான் தேர்தல் ஆணையத்தில் கட்சி முரண்பாடுள்ள கட்சியின் பட்டியலில் சேர்க்கப்படும் ஆபத்தை எதிர்பொண்டது. இந்த ஆபத்தில் இருந்து ஹஸன் அலியே கட்சியைக் காப்பாற்றினார்.
தற்போதும் இப்புதிய சட்டச் சிக்கலைத் தெளிவாக உணர்ந்திருந்தும் சல்மான் இம்முறையும் தலைவரைத் தவறாக வழி நடாத்தியுள்ளார். இவர் இப்படித் தொடர்ந்து தவறாக வழி நடாத்துவதற்கு அவர் சட்ட விடயங்களில் தலைவரிடம் பேரம் பேசும் சக்தியை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதே காரணமாகும். சல்மான் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யாது தொடர்ந்து 5 வருடங்கள் காலத்தை கடத்துவதற்காகவே இப்பேரம் பேசும் சக்தியை தன்னகத்தே வைத்திருக்க விரும்புகிறார்.
எனவே, இவ்வளவு அநியாயங்களும் நிகழ்வதற்கு சகோதரர் மன்சூர் அவர்களே நீங்களும் ஒரு பதவி நிலைக் காரணராக இருக்கிறீர்கள். நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், தங்களைப் பலிக் கடாவாக்கித் தந்திருக்கும் இப்பதவியை இராஜினாமாச் செய்வதே உங்களை நீங்கள் மீட்டுக் கொள்வதற்கும், கிழக்கின் கட்சி உரித்தை நிலைநாட்டுவதற்கும் உங்கள் முன்னே உள்ள ஒரே வழியாகும். கிழக்கைச் சேர்ந்த வேறு எவரும் இந்த அதிகாரமற்ற செயலாளர் பதவியை ஏற்கமாட்டோம் என்று சபதம் எடுக்க வேண்டும். அப்படி எவராயினும் இப்பதவியை ஏற்க முன்வந்தால் கிழக்கு மக்கள் அவர்களைப் புறக்கணிப்போம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இப்பதவியில் இருப்போர் எவ்வித தேர்தலிலும் பங்கு பெற முடியாது என்றும் மக்கள் பிரதிநிதியாக வர முடியாது என்றும் தலைவரே இப்பதவியாளரை நியமிப்பார் என்றும் யாப்பில் குறிப்பிட்டு விட்டு இப்பதவி கிழக்குக்குரிய கட்சிப் பங்கு என்று சொல்லும் மடமையை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? இப்பதவியை தேர்தலில் பங்குபற்றும் ஆர்வமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள் என்பதனால்தான் முன்னொருபோதும் உச்ச பீட உறுப்பினராக இருந்திராத மன்சூர் அவர்களே நீங்கள் 2015 இல் இப்பதவிக்கு தலைவரால் நியமிக்கப்பட்டீர்கள் என்பதைக் கூடவா உங்கள் அறிவுக் கண் கண்டு கொள்ளவில்லை?
எனது மௌலவி ஆசிரியர் சொன்னதற்கு ஒப்ப நமது அப்பாவிப் போராளிகளின் உலகமான எமது கட்சியின் அழிவுக்கு மன்சூர் அவர்களே "சூர்" ஊது குழலை ஊதிவிடாதீர்கள். நமது கட்சியில் புதிதாய் கவிந்திருக்கும் அசிங்கத்தை அகற்ற வழுவழுப்பு நீங்கும் வரை கழுவும் போராட்டத்தை முன்னெடுக்க முன்வாருங்கள். பதவிப் புறக்கணிப்பு போராட்டத்தின் முஸ்லிம் முன்னோடியாகி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள்.
"நியதியை மனிதர்கள் தீர்மானிப்பதில்லை, நியதி தனக்குத் தேவையான மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறது" - தோழர் கஸ்ட்ரோ
ReplyDelete"சூழ்ச்சி ,யார் யார் செய்கிறார்களோ ?
அவர்களுக்கு மேலால் ஒரு சூழ்ச்சி
நடாத்துபாவன் தான் அல்லாஹ் "
இதைத்தான் நாம் படித்திருக்கிறோம்.
Kaasu panam duttu..money money...basheer
ReplyDelete