IS பயங்கரவாதிகளிடமிருந்து மொசூல், விமான நிலையத்தை மீட்ட ஈராக் இராணுவம்
மேற்கு மொசூலில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவை வெளியேற்றும் ஈராக் அரச படை நடவடிக்கையின் முக்கிய அம்சமான நகரின் விமான நிலையத்தில் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இராணுவ பொலிஸ் விமான நிலையத்திற்குள் நுழைந்து ஓடுபாதையை கைப்பற்றியபோதும் விமான நிலைய வளாகத்திற்குள் இருந்த ஐ.எஸ் போராளிகள் கடும் தாக்குதலை ஆரம்பித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
அருகில் இருக்கும் இராணுவ தளத்திற்குள் நுழைந்த படையினரும் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.
விமானநிலைய ஓடுபாதை ஏற்கனவே ஐ.எஸ்ஸினால் தகர்க்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்ந்து பெறுமதி கொண்டதாக இருப்பதாக ஈராக் இராணுவம் கூறியுள்ளது.
இந்த பரந்த நிலப்பிரதேசத்தை கைப்பற்றுவது மேற்கு மொசூலை நோக்கி செல்லும் தெற்கு வீதிகளை பாதுகாக்க உதவும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை வான் தாக்குதல் மூலமே கடந்த புதன் இரவு படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு படையினர் விமானநிலைய சுற்றுப்பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர்.
படையினர் முன்னேறுவதை தடுக்க ஐ.எஸ் குழு வீதியோர குண்டுகளை புதைத்திருப்பதோடு மோட்டார் குண்டுகளையும் வீசி வருகிறது. ஒரு வீதியோர குண்டு தாக்குதலில் ஈராக்கிய லெப்டினன்ட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஈராக் தீவிரவாத தடுப்பு பிரிவின் பேச்சாளர் சபாஹ் அல் நூமான் குறிப்பிடும்போது, “மொசூல் விமானநிலையம் இராணுவத்திடம் வீழ்ந்துவிட்டதை எம்மால் உறுதி செய்ய முடியுமாகியுள்ளது. விரைவில் அதனை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்” என்றார்.
மோதலில் ஈடுபட்டிருக்கும் ஈராக்கிய படையுடன் வெளிநாட்டு துருப்பினர்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டபோதும் அவர்கள் எந்த நாட்டு படையினர் என்பது கூறப்படவில்லை.
விமான நிலையம் மற்றும் அல் கஸ்லானி இராணுவத் தளம் டைக்ரிஸ் நதியின் மேற்காக மொசூலின் தெற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது.
மொசூல் நகரை மீட்கும் படை நடவடிக்கையில் வான் மற்றும் பீரங்கி பலத்துடன் ஆயிரக்கணக்கான ஈராக்கிய துருப்புகள் பங்கேற்றுள்ளன.
கிழக்கு மொசூல் கடந்த மாதம் ஈராக் இராணுத்தால் மீட்கப்பட்டது.
Post a Comment