Header Ads



IS பயங்கரவாதிகளின் கோட்டையை பிடிக்க துருக்கி முயற்சி

துருக்கி இராணுவத்தின் ஆதரவு கொண்ட சிரிய கிளர்ச்சியாளர்கள் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் பாப் நகரைச் சூழவுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த குன்றுகளை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட மோதலில் பீரங்கி தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களில் 58 ஐ.எஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி இராணுவத்தின் செய்திக் குறிப்பொன்று தெரிவித்துள்ளது. இதில் இரு துருக்கி படையினர் கொல்லப்பட்டிருப்பதோடு 15 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று குறிப்பிட்டிருக்கும் துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு, அடுத்த இலக்கு ஐ.எஸ்ஸின் தலைநகராக கருதப்படும் ரக்கா நகர் என்று தெரிவித்தார்.

“அல் பாப் இராணுவ நடவடிக்கை எதிர்வரும் காலத்தில் விரைவில் பூர்த்தி செய்யப்படும். அண்மைய நாட்களில் எமது சிறப்புப் படையினர் மற்றும் சுயாதீன சிரியப் படை (கிளர்ச்சியாளர்) தீர்க்கமான முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர்” என்று துருக்கி தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கவ்சொக்லு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அல் பாப் நகரில் இடம்பெற்றுவரும் மோதல்கள் துருக்கி இராணுவத்திற்கும் சிரிய படைக்கும் டையில் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு இராணுவமும் நகரின் புறநகர் பகுதிகளில் ஒருசில கிலோமீற்றர் இடைவெளியிலேயே நிலைகொண்டுள்ளன.

துருக்கியின் எல்லையில் இருந்து தெற்காக சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் அல் பாப் நகர மேற்குப்புற புறநகர்களை நோக்கியே துருக்கி படை மற்றும் கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

“கடைசி இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ்ஸின் பாதுகாப்பு வலயத்தை முறியடித்து தொடர்ந்து முன்னேற முடிந்தது” என்று துருக்கி இராணுவம் சார்பில் பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பகுதிக்கு கடந்த வாரமே துருக்கியின் மேலதிக படை அனுப்பப்பட்டுள்ளது.

துருக்கி இராணுவம் கடந்த ஓகஸ்டில் சிரியாவுக்குள் படை நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் அல் பாப் நகர் துருக்கியின் பிரதான இலக்காக இருந்து வருகிறது. மறுபுறம் சிரிய அரச படையும் கடந்த வாரம் தொடக்கம் அல் பாப் நகரை நோக்கி வேகமாக முன்னேற ஆரம்பித்துள்ளது.

அல் பாப் நகரில் ஐ.எஸ் குழு தற்போது முற்றுகையில் சிக்கியுள்ளது. நகருக்கான கடைசி பாதையையும் சிரிய படை இந்த வாரம் துண்டித்தது. 

No comments

Powered by Blogger.