அனைவரையும் தாக்கும் Digital Stress
இணையம் அல்லது வேறு தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் உங்களுக்கு கொடுக்கப்படும் அல்லது உங்களுக்குள் உருவாகும் அழுத்தம்தான் இந்த டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்.
இந்தக் கட்டுரையை படிக்கும் நீங்கள் கூட, இதுபோன்ற டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸினை உணர்ந்திருக்கலாம். அல்லது இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் ஒருவரையாவது அறிந்திருக்கலாம். எந்நேரமும் கணினி, ஸ்மார்ட்போன், கேட்ஜெட்ஸ், சோஷியல் மீடியா என இணையத்தின் விர்ச்சுவல் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் மனிதர்கள் அனைவருமே இதற்கு இலக்கானவர்கள்தான். இணையத்தில் அதிக நேரம் பணிபுரிபவர்கள், இளைஞர்கள் என வெகு சிலரை மட்டுமே பாதித்துக் கொண்டிருந்த இந்தப் பாதிப்பு தற்போது குழந்தைகளையும் கூட சென்றடைந்திருக்கிறது. இதற்கு காரணம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மிகக் குறைந்த வயது முதலே, இணைய சேவைகள், மொபைல், கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துகின்றனர். இதற்கு முன்னர் இருந்ததை விடவும், மிக எளிதாக குழந்தைகள் கைகளில் இவை கிடைக்கின்றன. நாம் பல வருடங்களுக்குப் பின்னர் பெற்ற வசதிகளை, இன்றைய குழந்தைகள் விரைவிலேயே பெற்றுவிடுகின்றனர்.
டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்
நிச்சயம் நாம் இதனைத் தடுக்க முடியாது. மாறிவரும் தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதேசமயம் இவற்றால் வரும் பிரச்னைகளையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதில் இணையப் பாதுகாப்பு, உடல் நலக் கோளாறுகள், மனரீதியான பிரச்னைகள் போன்றவை முக்கியமானவை. அப்படி தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தமான, டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்சையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் இதற்கு இலக்காகிறார்கள்?
1. டீன் ஏஜ் பிரிவினர் மற்றும் இளைஞர்கள்.
2. அதிகளவில் இணையம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள்.
3. இணையத்திலேயே முழு நேரமும் பணி புரிபவர்கள்.
எந்த மாதிரியான விஷயங்களால் இவை ஏற்படுகின்றன?
1. சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி வரும் எதிர்மறையான கருத்துகள், விமர்சனங்கள்.
2. அதிக நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திப் பழகியதால், சிறிது நேரம் கூட அவற்றைப் பிரிந்து இருக்கக்கூட முடியாத மன நிலை. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாதபோது, உங்கள் மனதுக்குள் அதுபற்றி ஏற்படும் ஆர்வம், அவசரம் ஆகியவை.
3. ஆன்லைனில் சிலரால் எதிர்கொள்ளும் தனிநபர் தாக்குதல்கள், மிரட்டல்கள், ஃபேஸ்புக்கில் இருக்கும் போலிக் கணக்குகள் (Fake Accounts) போன்ற ஆள்மாறாட்டங்கள்.
4. அலுவலகம் மற்றும் சொந்தப் பணி தொடர்பான மின்னஞ்சல், செய்திகள் போன்றவற்றை நீண்ட நேரம் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் நிலை.
ஹேக்
5. உங்களுடைய ஆன்லைன் அக்கவுன்ட்கள் சிலரால் முடக்கப்படும்போது அல்லது ஹேக் செய்யப்படும்போது ஏற்படும் மன உளைச்சல்.
மேற்கண்டவை மட்டுமில்லாமல், இணையம் மற்றும் அதுதொடர்பான வழிகளில் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அனைத்துமே டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்தான். மன அழுத்தத்தால் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படுமோ, அவைதான் இதனாலும் ஏற்படும். நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களால் ஏற்படும் மனரீதியான பிரச்னைகளை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மெய்நிகர் உலகான இணையத்தில் யாரோ ஒருவரால், ஏதேனும் சில செயல்களால் ஏற்படும் மன அழுத்தத்தை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
தீர்வு உங்கள் கையில்!
நமது அன்றாட பணிகள், அலுவலகப் பணிகள் ஆகியவை டிஜிட்டலில்தான் நடைபெறுகின்றன. எனவே ஒரேடியாக இணையத்தை விட்டுவிட்டு ஒதுங்கிவிடுங்கள் என சொல்வது அபத்தம். மாறாக சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வதன் மூலம், இதன் தாக்கத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
உங்கள் சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, ஆன்லைனில் மன உளைச்சல் ஏற்படுத்தும், ஏமாற்றும் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது, ஆன்லைன் வாழ்க்கைக்கு அடிமையாகாமல் இருத்தல், ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் வரும் செய்திகள் மற்றும் சுகதுக்கங்கள் அனைத்தையுமே, நிஜ வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு எடுத்துக் கொள்ளுதல் போன்ற சின்னச் சின்ன நடவடிக்கைகள் மூலமாக, இவற்றின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
ReplyDelete(அல்குர்ஆன் : 13:28)