சிறுபான்மையினருக்கு எதிராக, தேர்தலை நடத்தப்போவதில்லை - ரணில்
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் தேர்தலை நடத்தக்கூடாது. பழைய முறைமையிலேயே தேர்தல் நடத்தப்படவேண்டியது அவசியம் என சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகள் கூட்டாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடத்தில் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவை எட்டுவோமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வறிக்கையின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படுமாகவிருந்தால் சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன கூட்டாக கண்டித்திருந்தன.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அக்கட்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய சோஷலிச கட்சி ஆகியனவும் இணைந்து விசேட சந்திப்பை நடத்தியிருந்தன. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த சந்திப்பில் கலந்து கொள்ளாத போதும் அக்கட்சிகளும் குறித்த நிலைப்பாட்டிலேயே இருப்பதாக அறிவிப்பைச் செய்திருந்தன.
அலரிமாளிக்கையில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அமைச்சர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன்
எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் ஸ்ரீ துங்க ஜயசூரிய ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து அமைச்சர் மனோகணேசன் தெரிவிக்கையில், பிரதமருடனான சந்திப்பின் போது, தேர்தலை நடத்துவதற்கு நாம் எதிர்க்கவில்லை. ஆனால் புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் தேர்தல் நடத்தக்கூடாது.
அவ்வாறு நடத்தினால் அது சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் 70 சதவீதம் தொகுதிவாரி முறையிலான பிரதிநிதித்துவ தெரிவும், 30 சதவீதம் விகிதாசார வாரியான பிரதிநிதித்துவ தெரிவும் கொண்ட கலப்பு முறையே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதித்துவங்கள் 6ஆயிரத்திலிருந்து 11ஆயிரமாக அதிகரித்தாலும் அது சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அமையாது.
காரணம் தொகுதிகளின் சதவீதம் அதிகமாக காணப்படுவதால் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை சிதறிவாழும் சிறுபான்மை மக்களால் தெரிவு செய்ய முடியாது போய்விடும்.
ஆகவே உடனடியாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் பழைய முறையில் அதாவது முழுமையான விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடத்த வேண்டும்.
அவ்வாறில்லாது விட்டால் சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படாத புதியதொரு தேர்தல் முறைமை பிரேரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்தவேண்டும் என நாம் கூட்டாக வலியுறுத்தினோம்.
அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறியதுடன் சிறுபான்மை, சிறு அரசியல் கட்சிகளை பாதிக்கும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் போவதில்லையெனவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவசரப்பட்டு ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தலை நடத்தப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார் என்றார்.
Post a Comment