சோமாலிய ஜனாதிபதியாக, அமெரிக்க பிரஜை தெரிவு
சோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக சோமாலிய – அமெரிக்க பிரஜையான முன்னாள் பிரதமர் முஹமது அப்துல்லஹி தேர்வாகியுள்ளார். ஜனாதிபதியை தேர்வு செய்ய விமான நிலைய கொட்டகை ஒன்றிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் -07-02-2017 வாக்கெடுப்பை நடத்தினர். இதில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஹஸன் ஷெய்க் முஹமது அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சோமாலியா எங்கும் ஆபத்தான சூழல் நிலவி வருவதால் தலைநகர் மொகடிசுவின் விமான நிலைய கட்டடத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
வாக்கெடுப்பை ஒட்டி இஸ்லாமிய ஆயுததாரிகளின் தாக்குதலை தவிர்க்க தலைநகரில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதோடு விமானம் பறக்க தடை வலயமும் நிறுவப்பட்டது.
சோமாலியாவில் 1969 தொடக்கம் தனிநபர் வாக்களிக்கும் முறை நடைமுறையில் இல்லை. அந்த வாக்கெடுப்பை அடுத்து இராணுவ சதிப்புரட்சி, சர்வாதிகாரம், பழங்குடி ஆயுததாரிகள் மற்றும் இஸ்லாமிய கடும்போக்காளர்களால் நாட்டில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. சோமாலியாவின் பலவீனமான அரசை கவிழ்க்க இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான அல் ஷபாப் போராடும் நிலையில் அங்கு 20,000 க்கும் அதிகமான ஆபிரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளன.
Post a Comment