சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு, ஆயுதம் அனுப்பிய டிரம்ப்
வடக்கு சிரியாவில் இயங்கும் அரபு மற்றும் குர்திஷ் போராளிகளின் கூட்டணியான சிரிய ஜனநாயக படைக்கு அமெரிக்காவிடம் இருந்து கவச வாகனங்கள் கிடைத்துள்ளன.
ஐந்து தினங்களுக்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் கிடைக்கப்பெற்றதாக அந்த படையின் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதன் சமிக்ஞையையே இது காட்டுவதாக அவதானிகள் கூறியுள்ளனர்.
“முன்னர் இலகு ரக ஆயுதங்கள், மனிதாபிமான உதவிகள் போன்றவையே கிடைத்திருக்கும் நிலையில் கடந்த காலத்தில் எமக்கு இந்த அளவு ஆயுதம் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்ட அந்த பேச்சாளர், “அமெரிக்காவின் புதிய தலைமை முன்னரை விடவும் எமக்கு உதவிகளை வழங்குவதற்கான சமிக்ஞையையே காட்டுகிறது” என்றும் தெரிவித்தார்.
சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு கவச வாகனங்கள் அனுப்பப்பட்டதை பென்டகன் பேச்சாளர் ஜோன் டொர்ரியன் உறுதி செய்துள்ளார். டிரம்ப்புக்கு முந்திய நிர்வாகத்தின் திட்டத்திற்கு அமையவே புதிய ஜனாதிபதி அனுமதி அளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிரிய ஜனநாயகப் படை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராகவே போராடி வருகிறது.
Post a Comment