Header Ads



ரணிலுக்கு அனுமதி மறுப்பு - சபாநாயகர் அதிரடி

திவுலபிட்டிய தொகுதியிலுள்ள காணிகள் தொடர்பில் ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த எழுப்பிய கேள்விக்கு சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பதில் அளிக்க முற்பட்டதால் சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

தனக்கு பதிலாகவே பிரதி அமைச்சருக்கு பதில் வழங்க இடமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிய போதும் சபாநாயகர், அதற்கு அனுமதி வழங்கவில்லை.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு அறிவுறுத்திய சபாநாயகர் காணி அமைச்சர் சபையில் இல்லாவிட்டால் ஆளும் தரப்பு பிரதம கொரடாவுக்கு பதில் வழங்குமாறு பணித்தார்.இந்த சர்ச்சையினால் சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டதோடு அமைச்சர் சார்பில் ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் வழங்கினார்.

திவுலபிடிய தொகுதியில் உள்ள காணிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியை இந்திக அனுருத்த எம்.பி. கேட்டபோது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பதில் வழங்கினார். ஆனால் ஒன்றிணைந்த எதிரணியினர் அதற்கு இடையூறு செய்து கோசம் எழுப்பினார்கள்.

இதன் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த எதிர்தரப்பு பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க, காணி அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சரோ பிரதி அமைச்சரோ அல்லது சபை முதல்வர், ஆளும் தரப்பு பிரதம கொரடா ஆகியோரோ தான் பதில் வழங்க முடியும். எங்கோ உள்ள ஒருவருக்கு முடியாது என்றார்.

சபை முதல்வர்

பதில் வழங்குவதற்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள். நிலையியற் கட்டளைபடி பிரதி அமைச்சருக்கு பதில் வழங்க முடியும்.

பிரதமர்

நிறையியற் கட்டளையின் பிரகாரம் பிரமருக்கோ சபை முதல்வருக்கோ ஆளும் தரப்பு பிரதம கொரடாவுக்கோ பதில் வழங்க முடியும். எனக்குப் பதிலாக பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு பதில் வழங்க இடமளிக்கிறேன்.

சபாநாயகர்

புதிய சம்பிரதாயத்தை உருவாக்காமல் நிலையியற் கட்டளைக்கமைய செயற்படுவோம். இல்லாவிட்டால் இந்த ஆசனத்திலிருந்து செயற்பட முடியாது.

பிரதமர்

எனக்கு வேறு எந்த அமைச்சருக்கும் பதில் வழங்க பொறுப்பு வழங்க முடியும்.

சபை முதல்வர்

பிரதமருக்கு எவருக்கும் பதில் வழங்குமாறு அறிவிக்க அதிகாரமுள்ளது.

சபாநாயகர்

எனது முடிவை அறிவித்துள்ளேன். அதன்படி செயற்படுமாறு அறிவிக்கிறேன். சபையை நகைப்புக்குரிய இடமாக்காதீர்கள். நான் சபாநாயகர் ஆசனத்தில் இருக்கையில் தவறான முன்மாதிரிகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.

இதனையடுத்து ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் வழங்கினார்.

இதனையடுத்து இடையீடு கேள்வி எழுப்பிய இந்திக அநுரத்த அரச காணிகளில் உள்ள மரங்களை தமது ஆதரவாளர்களுக்கு வழங்குகிறார்கள் என்றார்.

திவுலபிடியவில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் பிரதேச செயலாளருக்கும் இடையில் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்திக அனுருத்த எம்.பி யே இங்கு மண் அகழ்வதாக, பிரதி அமைச்சர் குற்றஞ் சாட்டியிருந்தார்.

No comments

Powered by Blogger.