பிரதமர் ரணில் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் - தேசிய சங்க சபை
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை வாகன துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தினருக்கு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஹெலிகொப்டரில் பாராளுமன்றம் வருவது தெரியவில்லையா என தேசிய சங்க சபை கேள்வி எழுப்பியது.
சிறு தவறுக்காக விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்படுவதை விடவும் மத்திய வங்கி விவகாரத்தில் நேரடித் தொடர்புடைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமே ஒரே சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தேசிய சங்க சபையின் தலைவர் மாதுறுவோயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பார்வையிடுவதற்கு மேற்படி அமைப்பின் தேரர்கள் வெலிக்கடை புதிய மெகசின் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினால் பிரிவினை வாதம் வெகுவாக தலைதூக்கி வருகின்றது.
மறுபுறத்தில் எட்கா ஒப்பந்தம் வாயிலாக எமது நாட்டை இந்தியாவின் காலனித்துவ ஆட்சிக்கு இலங்கையை உட்படுத்தி வருகின்றனர். அத்துடன் நாட்டின் வளங்களையும் விற்பனை செய்து வருகின்றனர். இவை அனைத்தும் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளின் தேவைக்காகவே செய்யப்படுகின்றன.
அவ்வாறு அந்நிய நாடுகளின் தேவைக்காக முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சிறையிலிடப்படுகின்றனர். அதற்கமையவே விமல் வீரவன்சவும் சிறையிலிடப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த வாகன துஷ்பிரயோக செயற்பாட்டுடன் நேரடியாகத் தொடர்புபட்ட நபர்கள் இன்று சுதந்திரமாக வெளியில் உலாவுகின்றனர். அவர்கள் சர்வதேச சக்திகளின் தேவைகளை நிவர்த்திக்க துணை போகின்றமை தான் அவர்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கான பிரதான காரணமாகும்.
ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் துரிதமாக சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் என்றால் பட்டப் பகலில் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோக ஊழல் செயற்பாட்டிற்கு எதிராகச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனையும் ஒரே சிறையில் அடைத்திருக்க வேண்டும்.
அதனை விடுத்து விமல் வீரவன்ச போன்றவர்கள் செய்த கடுகளவு தவறுகளுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் மாத்திரம் ஊழல் ஒழிந்து விடப் போவதில்லை. இவ்வாறிருக்க யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினர் விஜயகலா மகேஸ்வரன் பாரா ளுமன்றத்திற்கு ஹெலிகொப்டரில் வரு கின்றார். அது தொடர்பில் ஏன் இந்த அர சாங்கம் கண்டுகொள்வதில்லை என்றனர்.
Post a Comment