Header Ads



'பொதுப்பணம் சூறையாடப்படும்போது, ஆவேசம் வரவில்லையென்றால் நமது தேசப்பற்று பொய்யானது'

"நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்ற போது நமக்கு வலிக்க வேண்டும். பொதுப்பணம் சூறையாடப்படுகின்ற போது நமக்கு ஆவேசம் வர வேண்டும். அப்படி வரவில்லையென்றால், நமக்கிருப்பதாக  நாம் கூறுகின்ற தேசப்பற்று பொய்யானது என்பதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும்"

என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். பொறியாலாளர் அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது , 

"இன்றைய நாளில் நமது சுதந்திர தினமானது பரவலாக எல்லோராலும் கொண்டாடப்படுகின்றது. நமது காத்தான்குடிப் பிரதேசத்திலும் கடந்த காலங்களைப் போலல்லாது இன்று மிக அதிகமான சுதந்திர தின நிகழ்வுகள் நடக்கின்றன. இவ்வாண்டு தேசியக் கொடிகளுக்கான கேள்விகளும் விற்பனையும் அமோகமாக இருந்ததாக ஒரு செய்தியைப் பார்த்தேன்.  இதை எப்படி எடுத்துக் கொள்வது? மக்களின் அதிகரித்த தேசப்பற்றின் பிரதிபலிப்பாக இதனைக் எடுத்து கொள்வதாக? அல்லது மற்றுமொரு வியாபார வாய்ப்பாக மாத்திரமே இந்த சுதந்திர தினமும் மாறியிருக்கிறதா?

ஒரு தேசத்தின் சுதந்திர தின நிகழ்வென்பது அத்தேசத்தின் மீதான மக்களின் தேசப்பற்றுணர்வைப் பிரதிபலித்து உண்மைக்கு உண்மையாகவும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாட வேண்டிய ஒன்றாகும். ஆனால், வருடாவருடம் கொண்டாடப்படும் சம்பிரதாயபூர்வமான ஒரு நிகழ்வாகவே இது மாறியிருக்கிறது.

உண்மையில் தேசப்பற்று என்பது என்ன..? ஆட்சியாளர்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் காட்டப்படும் அன்பும் ஆதரவும் தேசப்பற்றாகுமா..? அது போலவே, தாம் சார்ந்த கட்சிகள் மீதும் தமக்குச் சார்பான கட்சித் தலைவர்கள் மீதும் பற்று வைப்பது தேசப் பற்றைக் குறிக்குமா..? இல்லவேயில்லை. இந்தத் தேசத்து மக்கள் மீதும் அதன் நலன்கள் மீதும் காட்டப்படும் உண்மையான பற்றும் அக்கறையுமே தேசப்பற்றைக் குறிக்கும்.

அந்த வகையில் சுதந்திர தினமான இன்று நாமெல்லோரும் மேற்கொள்ள வேண்டிய ஒரு சுய விசாரணை இருக்கிறது. கடந்த சுதந்திர தினத்திற்கும் இன்றைய சுதந்திர தினத்திற்கும் இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் நமது நடவடிக்கைகள் தேசப்பற்றைப் பிரதிபலிப்பதாக இருந்திருக்கன்றனவா..? தேசத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வேளைகளிலெல்லாம்  நம்மில் எத்தனை பேருக்கு வலித்திருக்கிறது? தேசத்தின் நலன்கள் நசுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எத்தனை பேர் அதற்கெதிராக குரல் கொடுக்க விளைந்திருக்கிறோம்?

சுதந்திர தினங்களில் மாத்திரம் தேசியக் கொடிகளை உயரப் பறக்க விடுவதனாலோ அல்லது தேசியக் கீதம் இசைக்கப்படும் போது நெஞ்சு நிமிர்த்தி எழுந்து நிற்பதாலும் மாத்திரம் நமது தேசப்பற்றை நிரூபித்து விட முடியாது. இந்தத் தேசத்து மக்களினது சொத்துக்கள் சூறையாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நமக்கு வலிக்க வேண்டும்; அம்மக்களின் நலன்கள் நசுக்கப்படுகின்ற போது நமக்கு ஆவேசம் வர வேண்டும்; அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். இது என்னுடைய கட்சி;என்னுடைய அரசாங்கம்; என்னுடைய தலைவன் என்ற எல்லா உணர்வுகளையும் தூக்கியெறிந்து விட்டு தேசத்தின் நண்மைக்காக எழுந்து நிற்க முன்வர வேண்டும். அதுவே உண்மையான தேசப்பற்றின் பிரதிபலிப்பாகும்.

இருந்தாலும் இந்நாட்டின் பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவது பற்றி நாம் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்வதாக இல்லை. அதன் பாரதூரத்தை நாம் இன்னும் புரிந்து கொள்ளவும் இல்லை. 

ஒரு விடயத்தை இங்கு சொல்ல நினைக்கிறேன். இந்த அரசாங்கத்தில் நடந்த பல்வேறு ஊழல் மோசடிகளில் இது ஒரு உதாரணம் மாத்திரமே.

ஒரு அமைச்சின் அலுவலகத்தை அமைப்பதற்காக தேவைப்படுகிறது என காரணம் சொல்லி, ஆடம்பரமான நவீன கட்டடத் தொகுதியொன்று இவ்வரசாங்கத்தின் முக்கியத் தலைவர் ஒருவரினால் வாடகைக்குப் பெறப்பட்டது. அதன் மாத வாடகை இரண்டே கால் கோடி ரூபாயாகும். இதற்காக செலுத்தப்பட்ட முற்பணம் 50 கோடிகளாகும். இதனை அனுமதிக்க முடியாது என நிதி கண்காணிப்புக் குழுக்கள் மறுத்து விட்ட போதிலும் அரசாங்கத்தின் அந்தப் பெரும் புள்ளி தற்துணிவாக அதனைச் செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் வாடகைக்குப் பெறப்பட்ட இந்தக் கட்டடத்தில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே எந்த வித உடனடி தேவையுமின்றியே இது நடந்திருக்கிறது.

ஆக, கட்டடம் ஒன்றை வாடகைக்குப் பெறும் விடயத்தில் மாத்திரம் 50 கோடிக்கு மேல் மக்களின் பணம் நாசமாக்கப்பட்டிருக்கின்றது. சாதாரண மக்களின் நலன்கள் மீது இது ஏற்படுத்தும் தாக்கங்களின் பாரதூரம் என்ன என்ற இன்னுமொரு கோணத்திலும் இதனை பார்க்க வேண்டும். 

உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு வாழ்வா சாவா என்ற போராட்டத்திற்கு மத்தியில் சத்திர சிகிச்சைக்காக அரசாங்க ஆஸ்பத்திரிகளில்  காத்திருக்கும் இருதய  நோயாளிகள் எத்தனை ஆயிரம் பேர் உள்ளனர்? பல மாதம் காத்திருந்தும் சிகிச்சை கிடைக்காத நிலையில் எத்தனை நோயாளர்கள் மரணித்துப் போகிறார்கள்?   இவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அரசாங்கம் ஏன் தாமதிக்கிறது என்று கேட்டால் வைத்தியச் சேவைக்கான நிதி ஒதுக்கீடு போதாது என்று சொல்கிறார்கள்.

ஒரு இதய சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் போதுமானது என்றால், 50 கோடி ரூபாவுக்கு 2500 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். இன்னுமொரு வகையில் சொல்வதென்றால், 2500 ஏழை உயிர்களை பாதுகாகக்கூடிய தொகையே இந்த ஒரு விடயத்தில் மாத்திரம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.  அது போலவே, மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் பல நூறு கோடி ரூபாய்கள் அபகரிக்கப்பட்டன. இப்படியாக, எத்தனை விடயங்களில் எத்தனை கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன? வீண் விரயம் செய்யப்பட்டுள்ளன?

தேசிய உணர்வு பற்றி கதைக்கின்ற நாம், இந்த விடயங்கள் நம்மில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன..? என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். அவ்வாறு தாக்கங்கள் ஏற்படவில்லையென்றால் நாம் கூறுகின்ற தேசிய உணர்வும் தேசப்பற்றும் பொய்யானது என்பதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்று வந்த ஊழல் மோசடிகளை நாம் அம்பலப்படுத்தினோம். அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முன்வருமாறு இந்த ஊரிலுள்ள பொது நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டோம். இரண்டு நிறுவனங்களைத் தவிர வேறு எவரும் இதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இன்று ஏராளமான நிறுவனங்கள் சுதந்திர தினம் அனுஸ்டிக்கின்றன.  சுதந்திர தினத்தில் காட்டுகின்ற அக்கறையினை பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்த நிறுவனங்கள் காட்டியிருந்திருந்தால் சமூகத்திற்கும் சமூகத்தின் அமானிதங்களுக்கும் எவ்வளவு பாதுகாப்பாக இருந்திருக்கும்?

எனவே, இந்த நாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்தைப்போலவே, பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்ததை போலவே, பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்களிடமிருந்தும் இந்த தேசத்து  மீட்டெடுக்க வேண்டும். அதற்காக  உழைப்பதற்கு இந்த சுதந்திர தினத்திலே நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும். அப்டிச்செய்தால் மாத்திரமே, உண்மையான தேசப்பற்றுடன் இந்த சுதந்திர தினத்தினை நாம் அனுஷ்டிப்பதாக அரத்தப்படும்"

No comments

Powered by Blogger.