குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலேயே திருத்தங்கள் - உச்சளவு பொறுப்புணார்வுடன் அறிவிப்பு
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் குறித்து இலங்கை முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என முஸ்லிம் விவாக, விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சலீம் மர்சூப் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் மற்றும் அவர்களுடைய பல்வேறு அக்கறைகள் தொடர்பில் இஸ்லாமிய சட்டவியலின் (பிக்ஹ்) கோட்பாடுகள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தகுந்த சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்குழு ஆர்வத்துடன் ஆய்வு செய்ததுடன் நாட்டின் சட்டத்திற்கு இணங்க சமூக மற்றும் சட்ட சிக்கல்கள் தொடர்பில் தீர்வுகளை முன்வைக்க விளைந்துள்ளது என முஸ்லிம் விவாக விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சலீம் மர்சூப் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் நீதி மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைச்சரவை அங்கீகாரத்துடன் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம், 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை ஆராய்வதற்கும் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்காகவும் நியமிக்கப்பட்ட குழு, சில பொதுமக்கள் செய்திப் பத்திரிகை ஆக்கங்களிலும், சமூக ஊடகங்களிலும் தெரிவித்துள்ள சில அக்கறைகள் தொடர்பில், இந்த ஊடக அறிக்கையை வெளியிடத் தீர்மனித்தது.
இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை செய்யவுள்ள விடயங்களில் உள்ள மிகவும் உணர்வுபூர்வமான தன்மையை கருத்திற்கொண்டு, இந்தக்குழு ஆங்கில, தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்களினூடாக பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியது.
தமது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அனுப்பிய காதி நீதிபதிகள், மார்க்க அறிஞர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருக்குப் புறம்பாக முஸ்லிம் கவுன்ஸில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் திருமண பதிவாளர்கள் சங்கம், இலங்கை காதி நீதிபதிகளின் மன்றம், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயல் மன்றம் (MWRAF), கண்டி மன்றம் (Kandy Forum), காலி முஸ்லிம் கலாசார சங்கம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆகிய பெயர் குறிப்பிடப்படக் கூடிய சில அமைப்புக்கள் தமது விரிவான கருத்துக்களை அனுப்பியிருந்தன.
பொதுமக்களிடமிருந்து நமக்கு கிடைத்த கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் ஆழமாகப் பரீட்சிப்பதற்கு அதிக காலம் எடுக்க வேண்டியேற்பட்டது. அத்தோடு, அதன் செயல்முறையை எளிதாக்குவதற்காக, இந்தக் கருத்துக்களை துலங்க வைக்கவும், உறுதிப்படுத்திக்கொள்ளவும் பல பொது அமர்வுகளையும் மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. இந்த நோக்கத்திற்காக இந்தக் குழுவானது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக் குழு, ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் மற்றும் விரிவுரையாளர் குழு ஆகியவற்றுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது.
பொது மக்களால் முகங்கொடுக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அவர்களுடைய பல்வேறு அக்கறைகள் தொடர்பில் இஸ்லாமிய சட்டவியலின் (பிக்ஹ்) கோட்பாடுகள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தகுந்த சட்டங்கள மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்குழு ஆர்வத்துடன் ஆய்வு செய்ததுடன், நாட்டின் சட்டத்திற்கு இணங்க சமூக மற்றும் சட்ட சிக்கல்கள் தொடர்பில் தீர்வுகளை முன்வைப்பதற்கு விழைந்துள்ளது.
இக்குழுவானது, புனித அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றின் கோட்பாடுகளின் அடிப்படையில் காதி நீதிமன்ற முறைமையில் தொடர்புபடும் கணிசமான மற்றும் நடைமுறை ரீதியிலான சட்டங்கள் தொடர்பில் விரைவாகவும் தகுந்ததாகவும் கொண்டுவர வேண்டியுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் விழிப்புடைய திறமையான புத்திஜீவிகளையும், சிறந்த சட்டத்தரணிகளையும் ஏனைய தொழில்வாண்மையாளர்ளையும் (Professionals) உள்ளடக்கிய புலமை வாய்ந்த நபர்களை கொண்டமைந்துள்ளது என்பதனை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இக்குழு தற்போது அதனது அறிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் உள்ளதுடன், பாரியளவில் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்துவதற்கு, அதன் பரிந்துரைகளை வழங்குவதற்கு, ஒருங்கிணைந்த வகையில் இக்குழு செயற்படுகின்றது என்பதை உச்சளவு பொறுப்புணார்வுடன் பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகின்றது.
-விடிவெள்ளி-
-விடிவெள்ளி-
Post a Comment