வெட்கமில்லாத மஹிந்த, தெரியாததைப் பற்றி வாயை திறக்கக்கூடாது - ரவி எச்சரிக்கை
“நாட்டை கடனில் மூழ்கடித்து, அதனை நல்லாட்சியிடம் ஒப்படைத்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெட்கமில்லாமல் எங்களிடம் இன்று கேள்வி கேட்கின்றார் என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சாடினார்.
நிதியமைச்சில் () நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் பெற்றக்கடனில், இதுவரை என்ன செய்திருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார். அதேமாதிரி நானும் கேட்கின்றேன், தனது ஆட்சியின் போது, மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரத்துக்காக என்ன செய்திருக்கிறார். நாட்டைஎம்மிடம் ஒப்படைத்த போது, நாடு கடனில் மூழ்கியிருந்தது. அந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்துமளவுக்கு நாட்டின் வருமானம் இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நாம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
தெரிந்த விடயங்களை மட்டுமே பேசுங்கள். தெரியாததைப் பற்றி வாயையே திறக்காதீர்கள். உங்கள் கருத்துக்களை ஆதாரத்துடன், நீங்கள் முன்வைத்தால் அதற்கான பதிலை நாங்கள் அளிப்போம். கடந்த அரசாங்கம், 9.7 பில்லியன் ரூபாய் கடனை, எம்மிடம் விட்டுச் சென்றமையையும் நாம் நினைவுபடுத்துகின்றோம். வட்டியும், வட்டிக்கான வட்டியையும் சேர்த்து நாங்கள் செலுத்தவேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்தும் வெட்கமில்லாமல் எம்மிடம், மஹிந்த கேள்வி கேட்கின்றார். நாடு கடனில் இருந்தாலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்குரிய திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. அவற்றைக் கண்டிப்பாக நாம் செய்வோம்.
ஆனால், இவ்வாறானதொரு கடன் சுமையிலிருந்து மேலெழும்பி வந்து, திடீரென எம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. முன்னால் ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டது. எனினும், நல்லாட்சியில் நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
Post a Comment