Header Ads



தொழுகைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த, இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம்

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் சட்டமூலம் ஒன்றுக்கு இஸ்ரேலிய அமைச்சரவை குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்திற்கு அமுல்படுத்தப்படவிருக்கும் “முஅஸ்ஸின் சட்டமூலம்” என்ற இந்த திட்டம் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

கடந்த நவம்பரில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலம் யூதர்களின் வாராந்த ஷப்பாத்திற்கான அழைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் இஸ்ரேலிய சுகாதார அமைச்சர் யாகொவ் லிட்ஸ்மான் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மத அமைப்புகள் இரவு 11 மணி தொடக்கம் காலை 7 மணி வரை ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதிப்பதாக மாற்றப்பட்டது.

குறித்த நேரத்தில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி சட்டத்தை மீறும் பட்சத்தில் 10,000 சேக்கல் (400000 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டமூலம் வரும் புதன்கிழமை இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது மூன்று சுற்று வாக்கெடுப்புக்கு பின் இது சட்டமாக அமுல்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதன்மூலம் அதிகாலை தொழுகைக்கு பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிப்பது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதில் கடந்த காலங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெல் அவிவுக்கு அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒலிபெருக்கியில் பாங்கு ஒலித்ததற்கு கடந்த நவம்பரில் 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஒலி மாசு மற்றும் தொந்தரவு தொடர்பான சட்டத்திலேயே நகர சபை அந்த அபராதத்தை விதித்தது.

இதே மாதத்தில் பள்ளிவாசல் பாங்கொலியால் ஒலி மாசு ஏற்படுவதாக கூறி சட்டவிரோத யூத குடியேற்றவாசிகள் ஜெரூசலத்தின் இஸ்ரேலிய மேயரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அடுத்து ஜெரூசலத்தின் அபூ டைஸ் சிறு நகரில் உள்ள மூன்று பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு இஸ்ரேல் நிர்வாகம் தடை விதித்தது. 

1 comment:

  1. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
    (அல்குர்ஆன் : 2:114)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.