வடக்கு முஸ்லிம்களுக்காக, குரல் கொடுத்த ஜெயத்திலக்க
வில்பத்து சரணாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை சில இனவாத அமைப்புக்களும், மதவாத அமைப்புக்களும், எதிர்ப்பதானது முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற உரிமையை தடுக்கும் செயற்பாடு என வடமாகாணசபை உறுப்பினர் ஜெயத்திலக்க கூறியுள்ளார்.
வடமாகாணசபையின் 85ஆம் அமர்வு இன்று நடைபெற்றிருந்தது. இதன்போது வில்பத்து மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பிலான பிரேரணை ஒன்றினை முன்வைத்து சபையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முஸ்லிம் மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்படவேண்டும். அதற்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
வில்பத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை இனவாத, மதவாத அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள், சுற்றுச்சூழல் அமைப்புக்கள் தடுத்து கொண்டிருக்கின்றன.
மீள்குடியேற்றம் தொடர்பாக காடுகள் அழிக்கப்படுவதாக பொய்யான பரப்புரைகளையும் செய்கிறார்கள்.
1990ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் தமிழீழ விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மறிச்சுக்கட்டி, கரதிக்குழி, பாலங்குழி, கொண்டச்சி, விளாத்திக்குளம் ஆகிய கிராமங்களில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்கள்.
அந்த மக்களை சட்டரீதியாக மீள்குடியேற்றும் பணி 2012ஆம் ஆண்டு சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் இனவாத, மதவாத அமைப்புகளும், சுற்றுசூழல் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களும் பொய்யான கருத்துக்களை கூறிவருவதை மாகாணசபை கண்டிக்கவேண்டும்.
மேலும் இந்த பொய்களை நம்பாமல் ஜனாதிபதி உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என மேலும் தெரிவித்தார்.
Post a Comment