Header Ads



எழுக தமிழ் நிகழ்வில் முஸ்லிம்கள் பற்றி, விக்ணேஸ்வரன் கூறியவை

எழுக தமிழ் நிகழ்வில், முஸ்லிம்கள் பற்றி, விக்ணேஸ்வரன் கூறியவை உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நிகழ்வு என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பு, நாவற்குடா விவேகானந்தா மைதானத்தல் நடைபெற்ற எழுக தமிழ்  நிகழ்வில்  உரையாற்றிய, அவர்-  

‘எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!’ என்றார் சுவாமி விவேகானந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் எமது மக்களுக்கு, நான் கூறுவதும் அதுவே. ‘எழுமின்! விழிமின்! இலட்சியங்களை அடையும் வரை நிறுத்தாதீர்கள்

ஒரு முக்கிய விடயத்தை இந்த மட்டக்களப்பு மண்ணில் கூற விரும்புகின்றேன். இன்றைய நிலையில் இந்த நாட்டில் தமிழ் மொழியைப் பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் ஒன்றாக இணைந்து கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும் எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும்.தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் அரசு ஈடுபட்டிருந்த வேளையில் தமது போர் யுக்திகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் முஸ்லீம் அரசியல் கட்சிகளைத் தம்முடன் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு மேலதிக அமைச்சுக்கள் எனப் பல சலுகைகளை வழங்கி தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையை வளர்க்க முற்பட்டது.இன்று தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவடைந்த நிலையில் பெரும்பான்மை இனத்தின் கழுகுப் பார்வையை முஸ்லீம் சகோதரர்கள் மீது திருப்பி முஸ்லீம்களின் வணக்கத் தலங்களை உடைப்பதும்; குடியேற்றங்கள் தொடர்பில் இன ரீதியான கருத்துக்களை முன்வைப்பதும், துவேச மனப்பான்மையை வளர்ப்பதும் எதற்காக?

எனது நண்பரும் தமிழ்ப் பற்றாளருமான அமரர் ஆர்ஆ அஷ்ரப் அவர்கள் 1975ம் ஆண்டிலிருந்து தந்தை செல்வா அவர்களின் விசுவாசியாக இருந்தவர். 1976ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ந் திகதி புத்தளம் பள்ளிவாசலில் 06 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்ட போது அக்காலத்தில் நாட்டிலிருந்த எந்தவொரு முஸ்லீம் தலைமைப்பீடங் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. தந்தை செல்வா அவர்கள் மாத்திரம் இவ்விடயம் சம்பந்தமாகக் கண்டனம் தெரிவித்து தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுடனான எமது ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் காரணியாக இருந்தார். அதுமாத்திரமன்றி 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தம்பி அஷ்ரப் அவர்கள் பங்குபற்றியிருந்தார் என்று எனக்கு ஞாபகம்.

சுதந்திரத்தின் பின்பு அனேகமான முஸ்லீம் தலைவர்கள் தமிழரசுக் கட்சி வேட்பாட்டாளர்களாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழ் முஸ்லீம் மக்களுக்கு வேறுபாடின்றி சேவையாற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் பிட்டும் தேங்காய்த் திருவலும் போல இரண்டறக் கலந்தவர்கள், பிரிக்கவே முடியாதவர்கள். என்று கூறியவர் வேறுயாருமல்ல காலஞ்சென்ற அமரர் அஷ்ரப் அவர்களே.  மேலும் முஸ்லீம் மக்களில் பலர் தமிழ் மொழியில் மிக்க பாண்டித்தியமும், புலமையும் கொண்டவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல. இன்றும் தமிழ் மொழியை மிகவும் நேசிப்பவர்களாகவும் இச்செம்மொழியை மேம்படுத்துவதற்கு உழைப்பவர்களாகவும் உள்ளார்கள். எம்முடன் கிழக்கு முஸ்லிம் தமிழ் அறிஞர்கள் கொழும்பு கம்பன் கழக விழாவில் பங்கு பற்றி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிவரும் சேவைகள் மறக்கமுடியாதன.

ஆனால், 1980ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளின் பின்னர் இடம் பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அரசியல் கருத்து வேற்றுமைகளும் எம் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிவிட்டது. இருந்த போதிலும் உரிய தேவையான சந்தர்ப்பங்களில் இயற்கையாகவே சகோதரர்களாக நாம் மாறிவிடுவதை, ஒன்றுபட்டு நாம் உழைப்பதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மேற்கூறியவாறு ஏற்பட்ட சில சம்பவங்கள் எம்மிடையில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. இருந்த போதிலும் தமிழ்த் தாயின் புதல்வர்கள் என்ற முறையில் முன்னர் எவ்வாறு எப்படி ஒற்றுமையை நிலைநாட்டினோமோ அவ்வாறே இன்றும் வேறுபாடுகளைக் களைந்து எமது உரிமைகள் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு பறிக்கப்படும் போது நாம் ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குரலோடு எமது கோரிக்கைகளை முன்னெடுக்கவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும்.

தமிழ் முஸ்லிம் ஒற்றுமை முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்கள் பேரவை தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதுடன் சகல இனப் பாதுகாப்பிற்காகவும் நாம் அல்லும் பகலும் பாடுபடுவோம். எம்முடன் நீங்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி, பிரதேச வாதம், வர்க்க பேதம் இன்றி, ஆண் பெண் பேதமின்றி, மத பேதமின்றி அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண்டிக்க முன் வரவேண்டும். தமிழ்ப்பேசும் மக்களுக்கு ஒரே அரசியல்த் தீர்வாக விளங்கக் கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பின் தேவையை வலியுறுத்த வேண்டும். முஸ்லீம் மக்களுக்கும் ஒரு சமஷ்டி அலகு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது ஒற்றுமையை கிறீஸ்தவ இந்துத் தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் உலகறியச் செய்ய வேண்டும். இதற்காக எமது குரல்கள் யாவும் ஒருமித்து ஓங்கி ஒலிக்கட்டும்.

வாழ்க தமிழ்! எழுக தமிழ்’ !

5 comments:

  1. I wont say anything. Let him say whatever he wants. He is just a waste.

    ReplyDelete
  2. There is some meaning in his views. One correction is that it is late Mr. Amirthalingham, who was the then Leader of the Opposition, who vehemently protested against the killing of the Muslims in Puttalam during the Govt. of Mrs. B. Even Dr. Badiuddin was wordless together with all other Muslim Ministers and MPs.

    ReplyDelete
  3. Now you all Tamil leaders are loving Muslim community just for re-joint of North East! this is public secret! Mr.Viknessvaran

    ReplyDelete
  4. உங்களுக்கு தேவையேற்படும் போது தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள். தேவை முடிந்தவுடன் சோனி. டேய் உங்கட முட்டாள் தனத்தில் சோனி வந்து விழுவானெண்டு கனவிலும் நினைக்காதீங்க

    ReplyDelete
  5. விக்னேஸ்வரன் ஐயா அவர்களே நீங்கள் இந்து தத்வத்தில் எந்த சாதி? நீங்கள் இந்துக்களில் ஏனையசாதிகளை எப்படி உங்களுடன் அனைத்து கொண்டு உண்மையான முறையில் வாழமுடியும் நீங்கள் உயர்சாதியாக இருந்தால் ஒரு கீழ்சாதியை உங்கள் வீட்டில் அல்லது வழிபாட்டுதலத்தில் அவரை அனுமதிப்பீரா இது சாத்தியமா? இவ்வாறு இருக்க எப்படி வேற்றுமத முஸ்லிம் மக்களுடன் உங்களால் உண்மையில் சகோதரர்களாக வாழமுடியும்!

    ReplyDelete

Powered by Blogger.