Header Ads



நீங்கள் தேடும் 'புதையல்' உங்களுக்குள்ளேயே உள்ளது..!

அது ஒரு பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு, ஓங்கி உயர்ந்த மரங்கள், அவற்றின் கீழ் கூட்டங் கூட்டமாக ஆட்டு மந்தைகள், கட்டுப்பாடற்று மேயும் சுகம், அதிலே லயித்து மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு மந்தையினூடே வழி தவறி வந்த பச்சிளம் சிங்கக்குட்டி ஒன்று சேர்ந்து கொண்டது. தன்னையும் ஒரு ஆடென்று நினைத்து ஆடுகளோடு ஆடாக அதுவும் சேர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது.

அது ஒரு அந்தி மயங்கும் வேளை தூரத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனை காற்றிலே மிதந்து வந்தது. அடுத்து வந்த வலுவான கர்ஜனை பள்ளத்தாக்கில் எதிரொலித்தது. ஆடுகளுக்கு இறைவன் வழங்கிய விழிப்புணர்வு அவற்றை சிலிர்க்க வைத்தது. அச்சத்தோடு அவை தலையை நிமிர்த்தி அங்கும் இங்கும் பயத்தோடு பார்வை சுழற்றிய காட்சி சிங்கக் குட்டியின் மனதில் ஒரு கிலுகிலுப்பை ஏற்படுத்தியது.

என்னாலும் இப்படி கர்ஜிக்க முடியுமோ? அதன் உள்ளுணர்வு முடியும் கர்ஜித்துப்பார் எனக்கட்டளையிட, ஐயப்பாட்டோடு அது தணிந்த குரலில் கர்ஜித்துப் பார்த்தது. அதே கர்ஜனை தான் மீண்டும் அது ஓங்கிக் குரல் எழுப்ப சுற்றி நின்ற ஆட்டு மந்தை ஓட்டம் பிடித்தது. சிங்கக்குட்டி கர்ஜனை வந்த திசை நோக்கி ஓடிச் சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.

நம்மில் பலரும் இப்படித்தான் நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலை அறியாமல் அவலத்தில் உழன்று கொண்டுள்ளோம். நமக்குள் உள்ள மாபெரும் சக்தியினை தட்டியெழுப்ப முயற்சி ஏதும் செய்யாது வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என வாழ்ந்து கொண்டுள்ளோம்.

1969 ஆம் ஆண்டு ஜப்பானில் டோபோ சிற்றூர். அங்கே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மிக்கி மோட்டோ என்ற இளைஞன் வாழ்ந்து வருகிறான். நூடுல்ஸ் தயாரித்து விற்பது அவனது தொழில். சாமுராய் என்ற அவனுடைய ஆசிரியருக்கு அழகானதொரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிக்கி விழைந்தான்.

பேராசிரியருக்குத் தன் அன்பு மகளை ஒரு சிற்றுண்டி விற்கும் சாமானியனுக்குக் கட்டித் தர விருப்பமில்லை. காதலிலே தோற்றுப்போன கயஸாக மாறி விடவில்லை நமது நாயகன், அவனுள் உறங்கிக் கொண்டிருந்த பிரிதிவிராஜ் உயிர்த்தெழுந்தான். எப்பாடு பட்டாவது என் நிலையினை உயர்த்திக் கொள்வேன் என உறுதி பூண்டான்.

நூடுல்ஸ் விற்பதை விட்டு விட்டு முத்துக்களை விற்கத் துவங்கினான். விரைவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அவனை விரட்டிக் கொண்டே இருந்தது. விற்பனைக்குத் தேவையான முத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை அவனுடைய தேடல் மும்முரமடைந்தது. குறைந்த விலையில் அதிக அளவில் இவற்றை எப்படி பெறுவது? இந்த முத்துக்கள் எப்படி உருவாகின்றன? அதிக அளவில் முத்துக்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?

அறிவார்ந்த பெருமக்களை அணுகி ஆலோசனைக் கேட்டான். "ஒரு சிப்பிக்குள் வேற்றுப் பொருள் ஏதாவது ஒன்று சென்றுவிட்டால் சிப்பிக்குள் சுரக்கும் திரவம் ஒன்று அதைச் சுற்றிப்படற அது முத்தாகிறது" என அறிந்தான். இயற்கையாக நிகழும் இதை நான் செயற்கையாகச் செய்தால் என்ன? என முயற்சித்தான். ஜப்பானில் செயற்கை முத்துக்களின் உற்பத்தி பெருகியது. செய்கையாக வேற்றுப்பொருள் ஒன்றினை உட்செலுத்தும் போது சிப்பிகள் மாண்டுபோயின.

அதேக் காலகட்டத்தில் அமெரிக்காவில் முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஜோசப் கோல்டு ஸ்டோன் இதற்குத் தீர்வு கண்டார். சிப்பிகள் மயக்க மருந்து கலந்த நீரில் மூழ்க வைக்கப்பட்டு வேற்றுப் பொருள் உட்செலுத்தப்பட்டது. விளைவு மாபெரும் வெற்றி. பேரழகுப் பெண்களுக்கு மேலும் பொலிவு கூட்ட நன்முத்துக்கள் வரம்பின்றிக் கிடைக்கும் வாய்ப்பு வந்தது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாபெரும் ஆற்றல் ஒன்று உறங்கிக் கொண்டுள்ளது. அதனைத் தட்டி எழுப்பியவர்கள் வெற்றி பெறுகின்றனர். அந்த உலகம் நமக்கு வாய்ப்புகள் பலவற்றை வரம்பின்றி வாரி வழங்கிக் கொண்டுள்ளது. அதனைக் கண்டறிந்து முறையாகப் பயன்படுத்தினால் வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெற முடியும். சும்மா இருப்பதே சுகம் என்பதை விடுத்து வாய்ப்புகளைத் தேடிக் கொண்டே இருங்கள்ஸ நிச்சயமாக வெற்றி பெற முடியும்.

-முஜஃபர் அப்துல் ரஹ்மான்-

3 comments:

Powered by Blogger.