Header Ads



பேஸ்புக்கினால் உடல், மனநல பாதிப்புகள் - ஆய்வில் உறுதியானது

(பேஸ்புக்) சமூக வலைதளத்தை அதிக அளவில் பயன்படுத்துபவர்களுக்கு, உடல் மற்றும் மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி' ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சான் டியேகோ நகரின் கலி ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்து பரிசோதிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

அடுத்தகட்டமாக, பங்கேற்பாளர்களின் அனுமதியுடன் அவர்களது முகநூல் நடவடிக்கைகளும் அலசி ஆராயப்பட்டன.

அந்த ஆய்வில், பிறரது பதிவுகளுக்கு அதிக அளவில் "விருப்பம்' (லைக்) தெரிவித்தவர்களும், தங்களது எண்ணங்களை (ஸ்டேட்டஸ்) அடிக்கடி பதிவு செய்பவர்களும் உடல்-மன நலன் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

அதேநேரம், மிகக் குறைந்த அளவு "விருப்ப'ங்களையும், "எண்ணங்'களையும் பதிவு செய்தவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.

உடல்-மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் முகநூலை அதிக அளவில் நாடுவதாகவும், அது அவர்களது உடல்நலனையும், மனநலனையும் மேலும் மோசமடையச் செய்வதாகவும் ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் முகநூலை அதிக அளவில் பயன்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள், எனினும், அவர்களது உடல் பருமனுக்கு முகநூல் பயன்பாடு காரணமல்ல என்று தெளிவுபடுத்தினர்.
ஏற்கெனவே, முகநூல் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பல சுவையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.