முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர், இனவாதிகளுடன் கைகோர்ப்பு - ரிஷாத்
இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும் அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்..
புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியால வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிபர் லாபிர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது:-
"புத்தளம் அகதிமுகாமில் வாழ்ந்து வடமாகாணத்தில் மீளக்குடியேறிவரும் மக்களினது பிரச்சினைகளிலும் உள்கட்டுமானப்பணிகளிலும் கரிசனை செலுத்தும் அதேவேளை சமாந்தரமாக புத்தளத்தில் வாழும் பெரும்பாலான அகதிமக்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் புத்தளத்தில் வாழ்ந்துவரும் அகதி மக்களின் கட்டுமானப்பணிகளையும் வாழ்வியல் தேவைகளையும் மேற்கொள்ளும் போது எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தோமோ அதேயளவு சவால்களை வடக்கு மீள்குடியேற்றத்திலும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனிபோடுகின்ற வேதனையான நிலையும் ஏற்பட்டுள்ளது.
எமது முழுநேரத்தையும், காலத்தையும் இப்படியே வீணடித்துவிட்டால் முஸ்லிம் சமுதாயத்துக்கு சேவை செய்யாமல் கால்கட்டுப் போட்டுவிடலாமென இவர்கள் கற்பனை பண்ணுகின்றனர். அவர்களின் இந்தக் கற்பனையானது பகல் கனவாகவே இருக்கும்."
Post a Comment