Header Ads



முஸ்லிம் தலைவர்கள், தம் சமூக உரிமைகளுக்காக போராடுவதில்லை - சந்திரிக்கா வேதனை

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் கல்வி, சட்டமும் ஒழுங்கு, அரசாங்க தொழில்வாய்ப்பு மற்றும் இடம் பெயர் முஸ்லிம்களது மீள்குடியேற்றம் உட்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகச் செயற்பட்டு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே தீர்வு பெறலாம் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் தன்னைச் சந்தித்த முஸ்லிம் தூதுக் குழு ஒன்றிடம் இதனைத் தெரிவித்தார். முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் முஸ்லிம் இயக்கங்களின் தூதுக்குழு ஒன்று முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றைக் கையளித்தது.

முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்குதல்கள் தொடர்பாகவும் அது தொடர்பாக சட்டமும் ஒழுங்கும் பேணப்படாது குறித்து தூதுக்குழுவினர் எடுத்து விளக்கினர். 2013 முதல் 2015 வரை முஸ்லிம்களுக்கெதிராக 550 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பாக சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படாதிருப்பது குறித்து முஸ்லிம் சமூகம் கவலை கொண்டுள்ளது என தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டினர். அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்குரிய சில வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறித்தும் தூதுக்குழுவினர் முன்னாள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களினால் பயிர் செய்யப்பட்ட காணிகள் புதை பொருளாராய்ச்சி வன ஒதுக்கை, வன ஜீவராசிகள் வலயம், சுற்றுலா அபிவிருத்தி பௌத்த ஆலயங்களுக்குரிய காணிகள் என பலவந்தமாக சுவீகரிக்கப்படுகின்றன. இக் காணிகள் 50 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்களால் பயிரிடப்பட்ட மற்றும் அனுமதிப்பத்திரங்கள் உள்ளவையாகும் என்றும் தூதக்குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினர். முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, மௌலவி ஆசிரியர் நியமனம், அரச துறைகளில் முஸ்லிம்களுக்குப் போதிய இடமளிக்கப்படாமை, நிர்வாக சேவையில் சேவை மூப்புள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்குரிய பதவி உயர்வுகளில் வழங்கப்படாதிருப்பது குறித்தும் தூதுக்குழுவினர் முன்னாள் ஜனாதிபதியின் அவதானத்திற்குக் கொண்டு வந்தனர்.

மாகாண முஸ்லிம்களது மீள் குடியேற்றம் தொடர்பாக அரசு இன்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாததது குறித்தும் இங்கு தூதுக்குழுவினர் எடுத்துக் கூறினார். 

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்களைப் போன்ற ஒழுங்கமைப்புடன் இயங்கும் சிவில் அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.தமிழ்த் தலைவர்கள் போன்று முஸ்லிம் அரசில் தலைவர்களும் செயற்பட அழுத்தம் கொடுங்கள். நானும் என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன். விரைவில் இப்பிரச்சினைகைள் தொடர்பான அமைச்சர்களை அழைத்துப் பேசுவேன். கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை குறித்து அம்பாறை அரச அதிபரை அழைத்துப் பேசுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி தூதுக்குழுவினருக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அஷ்ரபைத் தவிர முஸ்லிம் தலைவர்கள் எவரும், தம் சமூக உரிமைகளுக்காக போராடுவதில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது அரசாங்க காலத்தில் அஷ்ரபுக்கும் ஏ.எச்.எம். பௌசிக்கும் முக்கிய அமைச்சுக்கள், பதவிகளை வழங்கினேன். அவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்குவதற்குமே என்றும் தெரிவித்த அவர், அமைச்சர் அஷ்ரப் துறைமுகத்தில் பெருந்தொகையான முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கினார் என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என். எம். அமீனின் தலைமையில் அதன் உப தலைவர் ஹில்மி அஹமட் , அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிச் செயலாளர் மௌலவி. எம்.எஸ்.எம். தாஸிம், சோனக இஸ்லாமிய கலசார நிலையத்தின் தலைவர் உமர் காமில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தலைவர் பி.எம். பாரூக், பொருளாளர் எம்.என்.எம். நஃபீல், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவைத் தலைவர் தௌபீக் சுபைர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர் எம்.ஏ.எம். நிலாம், கிழக்கு மாகாண காணிச் செயலணியின் உறுப்பினர்களான எம்.ஐ. உதுமாலெப்பை, கே. நிஹால் அஹமட், எஸ்.எல். ரியாஸ், ஆலோசனை மற்றும் நல்லிணக்கப் பேரவையின் தலைவர் அஸ்லம் ஒத்மான் ஆகியோரும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர். 
முன்னாள் ஜனாதிபதியுடன் செயலணியின் பணிப்பாளர்களான எம்.எஸ். ஜயசிங்க, ஜாவிட் யூசுப், தனேஷ் காசி செட்டி, பிரதிப் பணிப்பாளர் சல்மா யூசுப், ஊடக அதிகாரி ஹிஷாம் மொஹமட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. Why they have to fight for Muslims rights while most of their ambitions are simply met like :
    - Life time cabinet minister post without doing nothing for the community, similar our previous leaders achieved.
    - Family members are well taken care of.
    - SLMC properties have been brought under their pillows.
    - Well furnished facilities and so pleasant foreign trips.
    - When we are in trouble, this selfish cabinet minister always says that we have to handle the issue tactically, more carefully and being inside the governing party !
    Being a Muslim in SL, I felt shame to be under this selfish leadership.
    We pray that we should have a talented and generous leaders who should immediately fight for our rights like Min. Risad Badiuddin and Min. Hizbullah.

    ReplyDelete
  2. இந்தப் பெண்மணிக்குள்ள அக்கரைகூட எமது சில அரசியல் வாதிகளுக்குக் கிடையாது.அடுத்த முறை ஆசனத்தை இலக்கு வைத்துத் தான் செயல்படுகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.