பெட்ரோல் செட்டுக்கும், செல்போனுக்கும் என்ன தொடர்பு..?
பெட்ரோல் பங்க் அருகில் செல்போனில் பேசக்கூடாது, மொபைல் இன்டர்நெட் உபயோகிக்கக் கூடாது என்று அடிக்கடி யாராவது சொல்வதைக் கேள்விப்படுகிறோம். பெட்ரோல் பங்கில் பைக் தீப்பற்றி எரியும் வீடியோக்களும் வாட்ஸ்அப்பில் அடிக்கடி வருகிறது.
செல்போனுக்கும் பெட்ரோல் பங்குக்கும் அப்படி என்ன தொடர்பு? விளக்கம் அளிக்கிறார் வேதியியல் பேராசிரியர் அப்துல் ரஹ்மான்.
‘‘பெட்ரோல் பங்க் பக்கத்தில் மொபைல் உபயோகிக்கக் கூடாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திதான். இதற்கு காரணம் உண்டு.வாகனங்களை ஸ்டார்ட் செய்ய அதில் உள்ள Spark plug உதவுகிறது. இந்த ஸ்பார்க் பிளக்கிலிருந்து அதிக வெப்பத்துடன் வெளிப்படும் தீப்பொறி, வெப்பம் குறைவாக உள்ள பெட்ரோலுடன் கலந்து இயக்க சக்தியை உண்டாக்குகிறது. இதனால், பெட்ரோலுக்குள் உள்ள வாயுவின் வெப்பம் காரணமாக நெருப்பு பற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு.
இதேபோல செல்போனில் பேசும்போது வெளிப்படும் வெப்பக் கதிர்கள் பெட்ரோல் பங்கில் பரவியிருக்கும் கேஸ்(GAS) உடன் கலந்துவிடக்கூடும்.இதன் காரணமாக தீ பற்றிக்கொள்ளலாம் அல்லது வெடிக்கலாம். இந்த அபாயம் இருப்பதால்தான் செல்போனை பெட்ரோல் பங்கில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார்கள்.
பெட்ரோல் பங்க் மட்டுமில்லாமல் மழை பெய்யும்போது வெளிப்படும் இடி, மின்னல் காரணமாகவும் இதே பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இந்த அபாயம் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, செல்போனை சூழலறிந்து பயன்படுத்துவதே பாதுகாப்பானது.’’
Post a Comment