'ஹிட்லரின் அடக்குமுறையை, பொலிஸ் நிதிமோசடி பிரிவு கையாண்டு வருகிறது'
நல்லாட்சி அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிதிமோசடி விசார ணைப் பிரிவு இல்லாதொழிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு இன்று ஹிட்லரின் அடக்குமுறை கொள்கையையே கடைப்பிடித்து வருவதாகவும் அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்றில் இன்று நடைபெற்றது.
இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதவான் லங்கா ஜயரத்ன விமல் வீரவன்சவை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அஙகு அவர் மேலும் தெரிவித்ததாவது
ஹிட்லரின் அடக்குமுறை கொள்கையையே பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு கையாண்டு வருகிறது. எதிர்த்தரப்பினரை அடக்கியாளும் கைங்கரியத்தில் இந்த நிதிமோசடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்திலுள்ள மோசடியாளர்கள், குற்றவாளிகள், திருடர்களை கைது செய்யாமல் எதிர்த் தரப்பினரை மட்டும் இலக்கு வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த நிதிமோசடிப் பிரிவு தொடர்பாக ஜனாதிபதி அல்லது நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை எடுக்காவிட்டால் இந்த நாட்டு மக்களிடம் ஒன்றை கேட்டுக் கொள்கின்றோம். இந்த நிதிமோசடிப் பிரிவை இல்லாதொழித்து விடுங்கள் - என்றார்.
Post a Comment