Header Ads



யூதர்களுக்கு நபிகளார், வழங்கிய தீர்ப்பு

யூதர்களையும் கிறித்தவர்களையும் இஸ்லாமிய ஆட்சி வந்ததற்கு பிறகு முஸ்லிம்களால் கொடுமைபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. இதை நாம் கீழே வரும் நபிமொழியைக் கொண்டு சரி பார்ப்போம்.

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.

ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர்.

அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், 'எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்' என்றார்கள்.

(அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், 'தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அவ்வாறே 'தவ்ராத்' கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை ('ரஜ்கி') பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்(து அந்த வசனத்தை 'யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், 'உன் கையை எடு!' என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கும் 'பலாத்' எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவளின் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை பார்த்தேன். (6819. : புகாரி- Volume : 7 Book : 86)

இந்த நபிமொழியில் நாம் பெறும் செய்தி அன்றைய யூதர்கள் அவர்கள் குற்றம் செய்தால் அவர்களின் வேதத்தின் கட்டளைப்படியே தண்டிக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எப்படி குர்ஆனின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே போல் யூத கிறித்தவர்களுக்கும் அவர்களின் வேத வசனத்தின்படியே தண்டனை வழங்கப்பட்டதையும் நாம் அறிகிறோம்.

அடுத்து ஒரு சம்பவம்

அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.

யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள்.

(அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள்.

அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். (புகாரி 6917- புகாரி Volume : 7 Book :87)

இங்கு முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தன்னை மற்ற தூதர்களை விட உயர்த்தி பேச வேண்டாம் என்று தடுப்பதை பார்க்கிறோம். முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) குர்ஆனை தனது சொந்த கற்பனையில் உருவாக்கியிருந்தால் இப்படி ஒரு வார்த்தை வந்திருக்காது. ஏனெனில் எந்த மனிதனும் ஒரு மதததையோ ஸ்தாபனத்தையோ உருவாக்குவது தனது சீடர்கள் தனக்கு சேவகம் செய்ய வேண்டும். தனக்கு காணிக்கையாக பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுவர். ஆனால் இங்கு நிலைமையை தலைகீழாக பார்க்கிறோம். ஒரு முஸ்லிம் முகமது நபியை உயர்த்தி பேசி ஒரு யூதரை அடித்து விடுகிறார். அந்த யூதரும் முகமது நபியிடம் முறையிட்டால் நீதி கிடைக்கும் என்று நம்பி முறையிடுகிரார். முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தன்னை புகழ்ந்த முஸ்லிமை கண்டித்து மோசேயை விட என்னை அதிகம் புகழாதீர்கள் என்று அந்த முஸ்லிமுக்கு அறிவுறுத்துகிறார்.

இதுதான் இஸ்லாம்!

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை(முகமது நபியை) அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' (குர்ஆன் 2:146)

- சுவனப்பிரியன்

No comments

Powered by Blogger.