சிங்களவர்களும், தமிழர்களும் ஆர்ப்பாட்டம் - விருந்துபசாரத்தில் பங்கேற்ற ரணில்
அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மென்பேர்ண் நகரில் நேற்று தமிழர்களும், சிங்களவர்களும் தனித்தனியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிய டீக்கின் பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா பிரதமர் நேற்று உரையாற்றியிருந்தார்.
இதற்காக அவர் வருகை தந்திருந்த போது, புலம்பெயர் தமிழர்களும், சிங்களவர்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
போர்க்குற்றவாளிகளை கௌரவிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாக்கியங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன், புலம் பெயர் தமிழர்கள் தனியாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் புலிக்கொடியையும் ஏந்திருந்தனர்.
அதேவேளை, போர்வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதே, சமஷ்டியை வழங்காதே, என்பது போன்ற வாக்கியங்களுடன் கூடிய அட்டைகளுடன், புலம்பெயர் சிங்களவர்களும் சிறிலங்கா பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, டீக்கின் பல்கலைக்கழகத்துக்குள் சிறிலங்கா பிரதமர், இந்தியப் பெருங்கடலில், கப்பல்களின் பயணங்கள் தொடர்பாக உரையாற்றி விட்டு, இராப்போசன விருந்திலும் பங்கேற்றார்.
இன்று மெல்பேர்ணில் இருந்து புறப்படவுள்ள சிறிலங்கா பிரதமர் நாளை நாடு திரும்புவார்.
Post a Comment