முஸ்லிம்கள் சட்டவிரோத அத்துமீறல்கள், எவற்றிலும் ஈடுபடவில்லை - சமன் ரத்னபிரிய
வில்பத்து விவகாரம் தொடர்பில் தெளிவூட்டலை வழங்குவதற்காக தேசிய தொழிற்சங்க முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கழுதை என்ற வார்த்தைப் பிரயோகத்தால் அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
மருதானை சன சமூக நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய தொழிற்சங்க முன்னணி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய குறிப்பிடுகையில்,
வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாக சிலர் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
அதன் உண்மையை கண்டறிவதற்காக வில்பத்து வனப்பகுதிக்கு நேரடியாக சென்று தரவுகளை சேகரித்திருந்தோம். அதனடிப்படையில் அங்கு எவ்விதமான சட்டவிரோத குடியேற்றங்களும் இடம்பெறவில்லை.
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் பிரதேசவாசிகள் வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் யுத்தம் காரணமாக அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஏனைய மாவட்டங்களில் தங்கியிருந்தனர்.
பின்னர் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் குறித்த பிரதேசவாசிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு குடியேறியிருக்கின்றார்கள்.
இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைப்பாடுகளுக்காக இனவாதப்போக்கில் நகர்த்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு நடந்து கொள்வதால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதுடன் நாட்டின் அபிவிருத்திகளிலும் தடை ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கும்.
வில்பத்து வனப்பகுதியில் முஸ்லிம்கள் சட்டவிரோத அத்துமீறல்கள் எவற்றிலும் ஈடுபடவில்லை. குறித்த பகுதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவினத்தவர்களினது குடும்பங்களும் மீள்குடியேறியுள்ளன.
இவற்றில் முஸ்லிம்களை மாத்திரம் மேற்கோள் காட்டுவதன் வாயிலாக இனவாதிகள் மீண்டுமொரு சமுதாயப் பிரச்சினைகளை தோற்றுவிக்க முற்படுகின்றனர் என்பது தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த யுத்த காலத்தில் வெளியேறிய பிரதேசவாசிகள் மீண்டும் அங்கு குடியேற முயற்சிக்கும் போது அவர்களது சொந்த நிலங்கள் காடுகளாக காட்சியளித்தன.
அதனை அழித்து குடியேற்றங்களை அமைக்கும் போதே வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
எனினும் தொல்பொருள் ஆரதாரங்களின் அடிப்படையில் குறித்த பிரதேசவாசிகளினது சொந்த காணிகள் என்பது ஊர்ஜிதமாகின்றது.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள் வில்பத்து தேசிய வனத்துக்கு சொந்தமான காணிகளில் அமைக்கப்படவில்லை. தற்போது குறித்த பகுதிகளில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்துவருகின்றன.
ஆகவே இவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அவர்களுக்கான குடியிருப்புக்கள் மற்றும் அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார்.
இதன்போது வில்பத்து வனப்பகுதியில் சட்டவிரோத காடழிப்பு ஏதும் இடம்பெறவில்லை என்பதை ஊடகங்கள் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக பிரதேசவாசிகள் சிலர் இவ்வூடகவியலாளர் சந்திப்பிற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் சாட்சியங்களிடம் கேள்விகளை கேட்பதற்கு முற்பட்டபோது ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்த ஏற்பாட்டுக்குழு அதிகாரிகளில் ஒருவர் ஊடகவியலாளர்களை கழுதை என விமர்சித்ததால் ஊடகவியலாளர் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றதுடன் அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டது.
Post a Comment