பேஸ்புக்கில் பொய் தகவல், அரச ஊழியர்கள் போராட்டம் - வாழைச்சேனை பொலிஸ் அதிகாரிகளிடம் மகஜர்
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்டன போராட்டத்தினால் குறித்த பிரதேச சபைக்குப்பட்ட பல பகுதிக்குரிய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
குறித்த பிரதேசபை செயலாளர் மற்றும் சக ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்த இனம் தெரியாத முகநூல் ஒன்றினூடாக பல பிழையான தகவல்கள் பரப்பப்பட்டு வருதைக் கண்டித்து இன்றைய தினம் கவனயீர்ப்பு கண்டன பேரணியொன்று இடம்பெற்றது.
இன்றைய தினம் பொதுமக்கள் நாள் என்பதினால் மக்களின் சேவைகள் ஒரு சில மணியத்தியாலங்கள் முடக்கப்பட்டிருந்ததுடன், பிரதேச சபைக்குப்பட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து சேவைப் பகுதி ஊழியர்களும் குறித்த கண்டன கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசபைக்கு முன்பாக ஊழியர்கள் மற்றும் ஒரு சில பொது அமைப்புக்களின் ஆதரவின் மூலம் முன்னெடுக்கப்பட்ட கண்டன கவனயீர்ப்பு பேரணி பொது நூலகம் கட்டடம் வரை சென்றதும் குறித்த கண்டன கவனயீர்ப்பு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் பிரதேசசபை ஊழியர்களினால் கையளிக்கப்பட்டு குறித்த போலியான தகவலை முன்னெடுத்து வரும் முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் வாழைச்சேனை பிரதான வீதி வழியாக ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்றமையினால் வாகன போக்குவரத்து சாரதிகளும் ஒரு சில நேரம் காத்துக்கொண்டு இருந்ததை அவதானிக்க கூடியாதகயிருந்தது.
குறித்த பிரதேசசபை தொடர்பாக பல்வேறுபட்ட பிழையான தகவல்கள் கடந்த காலங்களில் இருந்து வெளிவருவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை உரியவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், இது தொடர்பாக பொலிசார் மற்றும் புலனாய்வாளர்களின் பங்களிப்பு மூலம் குறித்த தகவலைப் பரப்பும் நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்வைத்தனர்.
முகநூல் பாவனையூடாக பல்வேறுபட்ட நன்மையான மற்றும் தீமையான பல தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் முகநூலுக்கு எதிராக நாளுக்கு நாள் முறைப்பாடுகளும் கிடைக்கப்பபெற்று வருவதாக தெரிவித்திருக்கும் நிலையில் அரச ஊழியர்களை தாக்கியதாக பல தகவல்கள் முகநூல் வழியாக அண்மைக் காலங்களில் இருந்து வெளிவருவதினால் முகநூல் மற்றும் முகநூல் பாவனையாளர்களுக்கும் எதிராக அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைமை நாட்டில் பல இடங்களில் ஏற்பட்டுள்ளதை இது போன்ற கண்டன கவனயீர்ப்பு பேரணிகள் மூலம் தெரியவருகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக பிரதேசசபை செயலாளரிடம் கேட்ட போது,
எனது நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பிரதேச சபையின் செயற்பாடுகளை ஒரு சிலரால் குழப்பகரமான நிலைக்கு கொண்டு செல்ல எத்தனிப்பதாகவும், போலியான முகநூல் முகவரியை வைத்துக் கொண்டு பிரதேசசபையில் கடமை செய்யும் அனைவரையும் ஒரு பழைமையான பார்வைக்குரியவர்கள் போன்ற கருத்துக்களை பதிவிடுவதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான குழப்பகரமான செயற்பாடுகளுக்கும், கருத்துக்களுக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தகவல் அறியும் சட்டம் அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் பிரதேச சபையில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை வைத்து போலியான தகவல்களை பரப்பி வரும் நபர்கள் குறித்த தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி நேரடியாகவே பிரதேச சபைக்கு வருகைதந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
Post a Comment