ரோஹின்யா முஸ்லிம்களை மியன்மார் இராணுவம் கொன்றது, மனித குலத்திற்கு எதிரானது
மியன்மார் இராணுவம் பதற்றம் கொண்ட ரகினே மாநிலத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டுள்ளது. நான்கு மாதங்கள் இடம்பெற்ற இந்த படை நடவடிக்கையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு இடம்பெற்றதற்கான சாத்தியம் பற்றி ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி பங்களாதேஷ் எல்லையை ஒட்டி பாதுகாப்பு முகாமில் ஒன்பது பொலிஸார் கொல்லப்பட்ட தக்குதலை அடுத்தே இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சுமார் 69,000 ரொஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மாரில் இருந்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் பெற்றனர்.
எனினும் நோபல் விருது வென்ற மியன்மார் தலைவி ஆங் சான் சூகி, ரகினேவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை முற்றாக மறுத்துள்ளார். அவர் சிறுபான்மை முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தவுங் டுன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டதாவது, “வடக்கு ரகினேவின் நிலைமை தற்போது ஸ்திர நிலையை அடைந்துள்ளது. இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட பொலிஸார் மாத்திரம் நிறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் 1000க்கும் அதிகமான ரொஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பதாக வன்முறையில் இருந்து தப்பி வந்தவர்களை அணுகிய ஐ.நா அதிகாரிகள் கண்டறிந்தனர்.
எனினும் இந்த இராணுவ நடவடிக்கையில் 100க்கும் குறைவானோரே கொல்லப்பட்டதாக மியன்மார் ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் கூறியிருந்தார். பெளத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் தலைமுறை காலமான பாகுபாட்டை முகம்கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் பங்களாதேஷில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படுவதோடு வடமேற்கு மியன்மாரில் 1.1 மில்லியன் ரொஹிங்கியா மக்கள் ஒதுக்கப்பட்ட சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
Post a Comment