Header Ads



''சைட்டம்'' போராட்டத்தில் குதிக்கிறது ஜே.வி.பி

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ சங்கத்துடன் இணைந்து போராடுவதற்குத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர்களை மருத்துவ சபையில் பதிவுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும், இதனை அரச மருத்துவர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. கடந்த வாரம் கூடிய குறித்த சங்கத்தின் மத்திய குழுவில் அரசியல் கட்சிகளைச் சந்தித்து இது பற்றி கலந்துரையாடுவதற்கு தீர்மானித்தது. இதற்கமைய நேற்றையதினம் அரச மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதிகள், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டவர்களை கட்சித் தலைமையகத்தில் சந்தித்திருந்தனர்.

இந்தச் சந்திப்பில் சையிட்டம் மருத்துவ கல்லூரி விவகாரம் மற்றும் இலவச மருத்துவ சேவையில் காணப்படும் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மருத்துவர் சங்கத்துடன் இணைந்து போராடத் தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது என்பது பற்றி அடுத்த சந்திப்புக்களில் தீர்மானிக்கப்படும் என்றார்.

நாட்டின் வைத்திய சேவை மற்றும் நோயாளர்களின் உயிர்களை கஷ்டங்களுக்கு உட்படுத்தக்க கூடிய இந்த சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருந்தது. இதற்காக இணைந்து செயற்பட தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பில் ஜே.வி.பியின் சார்பில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிமல் ரத்னாயக்க ஆகியோரை சந்தித்ததாக அரச மருத்துவர் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நவீன்.டி.சொய்சா தெரிவித்தார். சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்று, மருத்துவ சபையினால் அங்கீகரிக்கப்படாதவர்கள் வைத்தியர்களாக பதிவுசெய்யப்படுவதால் நோயாளரின் உரிமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புப் பற்றி இச்சந்திப்பில் தாம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.