'ஆசை இஷ்டமாக இருக்கும், பேராசை நஷ்டமாக முடியும்'
“பெண்கள், ஆண் மக்கள், பெருங்குவியல்களான பொன்னும், வெள்ளியும், அடையாளமிடப்பட்ட (உயர்ரக) குதிரைகள், கால்நடைகள், வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை உலக வாழ்வின் சுகப்பொருட்களாகும்; அல்லாஹ்விடம் அழகான தங்குமிடமுண்டு.” (அல்குர்ஆன் 3:14)
1. பெண்ணாசை 2. ஆண் குழந்தை மோகம் 3. பொன்னாசை, மண்ணாசை மீது இயற்கையாகவே மனிதன் ஆசைப்படுகின்றான் .
இவ்வாறு ஆசைப்படுவது தவறல்ல. அவற்றை அடையும் வழி நேரான வழியாக இருக்கவேண்டும். குறுக்கு வழியில் அடைவது கிறுக்குத்தனமானது.
அளவுடன் நேசி; நலமுடன் வாழ். ஆசை ஏற்படுவது மனித இயல்பு. அதுவே பேராசையாக மாறும்போது கடைசியில் கிடைப்பது அழிவு.
மனித மனம் கவர்ந்த பொருட்களின் வரிசையில் முதலிடம் பெறுவது பெண்ணாசைதான். சொர்க்க கிடைத் தாலும், அது தனிமையில் கிடைத்தால், இனிமை கிடைக்காது. சொர்க்கம் கூட இன்பமயமாக மாற அங்கே பெண் துணை தேவைப்படுகிறது. எனவே தான் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களை படைத்த இறைவன் அவரை சுவனில் தனியாக குடியமர்த்தியதும், அவருக்கு சலிப்பு வந்து விட்டது. பிறகுதான் அவருக்கு பெண் துணை கிடைத்தது.
இவ்வுலகில் ஒரு பெண்ணை அடைவதாக இருந்தாலும், இஸ்லாம் வகுத்த ஹலாலான நிக்காஹ் எனும் ஆகுமான வழியில் தான் அடைய வேண்டும். அந்த ஆசை அளவு கடந்து, ஹராமாக மாறும்போதுதான் ஈவ் டீசிங், பாலியல் பலாத்காரம் போன்ற சமூக தீமைகள் நிகழ வாய்ப்பாக மாறிவிடுகிறது.
இந்த வரிசையில் மற்ற பொருட் களையும் அளவு கடந்து, நேசம் கொள்ளும் போது அங்கும் நாசம் தான் ஏற்படுகிறது.
ஆண் குழந்தை மோகத்தால் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் மனைவியை கணவனும், மாமியார், மாமனாரும் கொடுமைபடுத்துவது முதல், உயிருடன் கொளுத்துவது வரை சில நேரங்களில் சில இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
மண்ணாசை வெறித்தனமாக வரும் போது, அடுத்தவரின் நிலத்தையும் அபகரிக்கும் அற்ப புத்தி சிந்தனையில் குடிவந்துவிடுகிறது. கடுகளவு அடுத்தவரின் மண்ணை பிடுங்கினால், நாளை மறுமையில் ஏழு மடங்கு மண்ணை சுமக்கும் கெ £டுமை ஏற்படும் என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும். புறம்போக்கு நிலத்தை பட்டா போடுவது, அடுத்தவரின் நிலத்தை தனது நிலம் என்று கையகப்படுத்தி போலி பத்திரம் தயாரிப்பது யாவும் பேராசையின் விளைவே அன்றி வேறில்லை.
ஒருவருக்கு பொருளாசை ஏற்படும் போது, அதை அடைய நேர்மையான வழியில் பொருளீட்ட வேண்டும். பொருளாசை அளவு கடந்து பேராசையாக உருவெடுக்கும்போது, பொருளீட்டும் வழி திருட்டு, கொள்ளை, பித்தலாட்டம், கலப்படம், அனாதைகளின் சொத்தை அபகரிப்பது, பொதுச்சொத்தை தனியார் மயமாக்குவது, வழிப்பறி, மிரட்டிப் பறித்தல், லஞ்சம் வாங்குதல், வட்டி வாங்குதல், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது போன்ற முறைகேடான, ஹராமான வழிகளில் அமைந்துவிடுகிறது.
அன்றைய காலகட்டத்தில் வாகனமாக குதிரையும், கால்நடைகளும் பயன்பட்டன. இன்று மாற்று வாகனம் வந்துவிட்டன. ஒருவருக்கு சொந்த வாகனம் அவசியம் இருக்கவேண்டும். இது அவரின் ஆசை கனவு. அதற்காக ரோட்டில் பூட்டிகிடக்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை திருடுவது பேராசையின் உச்சகட்டம்.
மனித மனம் கவரும் பொருட்களை ஆகுமான வழியில் அடைய முயல வேண்டும். தவறான முறையில் அடைய பேராசை படக்கூடாது. அவ்வாறு அடைந்தால் அதற்குரிய விலையை கொடுத்தே ஆக வேண்டும்.
Post a Comment