முஸ்லிம் சமூகம், விழிப்பாக இல்லை - ஹிஸ்புல்லாஹ் கவலை
நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய தான் வழங்கி வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். இது நல்லாட்சி அரசின் மாபெரும் சாதனையாகும்.
ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் உரித்தான ஒன்றல்ல. அது அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டம். ஆனால், துரதிஷ்டவசமாக இது குறித்து முஸ்லிம் சமூகம் விழிப்பாக இல்லை. இச்சட்டத்தின் பயன்பாடுகள் தொடர்பில் சிறுபான்மை சமூகத்துக்கு தெளிவூட்ட வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகளை- உரிமைகளை சரியான முறையில் அனைவரும் பயன்படுத்த வேண்டும். மாறாக, அச்சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்துவது அதன் செயற்பாடுகளுக்கு பாதிப்பாக அமையும்.
இச்சட்ட மூலத்தை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பக்கபலமாக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோருக்கு பாராட்டுக்களையும் - நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.- என்றார்.
Post a Comment