சகலதையும் இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு - பௌத்தர்களை பாதுகாக்க, நடவடிக்கை வேண்டும்
நாட்டில் முக்கிய வியாபார நிறுவனங்கள், ஊடகத் துறை, நீதித்துறை என சகலவற்றையும் இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் நாம் அனைவரும் கூடி ஆலோசித்து, இவற்றிலிருந்து சிங்கள பௌத்தர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள குறித்த அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- '' நாடு இன்று பௌத்தர்கள் அல்லாத மற்றும் சர்வதேச சக்திகளால் ஆளப்படுகிறது. பௌத்தர்கள் வெவ்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு பிரிந்து சென்றமை இதற்கு ஒரு காரணமாகும்.
அன்று விடுதலைப் புலிகள் பௌத்தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதைப் போன்று இன்று கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். நாம் பௌத்தத்தை பாதுகாப்பதற்கு போராடுகின்றோமே தவிர ஏனைய மதங்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் எம்மை சமுதாயத்தில் தவறாக சித்திரிக்கின்றனர்.
நாளைய தினம் குறித்த நம்பிக்கையற்ற தன்மை இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடியை இல்லாமல் ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் இன்று 95 சதவீதமாக ஊழல் மோசடி அதிகரித்துள்ளது. சுமார் 70 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த இந்த கட்சிகள் இன்று நாட்டை கடன் சுமையில் தள்ளியுள்ளன.
மக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். வாழ வழியின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், நிபுணர்கள், வர்த்தகர்கள் என அனைவருக்கும் இதனைப் பற்றி சிந்திக்காமல், இவர்களுக்காக போராடும் எம்மை இனவாதிகள் என்கின்றனர்'' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment