இன்று வர்த்தமானி வெளியிடப்பட்டால், 90 நாட்களுக்குள் தேர்தல்
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான களத்தை தயார் படுத்துவதே எமது பணியாகும் . போட்டியிட்டு மக்கள் ஆணையை பெற்றுக் கொள்வது அரசாங்கத்தினதும் அரசியல் கட்சிகளினதும் பணி என்று தெரிவித்த சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , இன்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் 90 நாட்களுக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவு படுத்துகையிலேயே ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
சுயாதீன எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கும் உள்ளூராட்சி மன்ற அமைச்சருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கருத்து வேறுபாடுகளில் இருந்து கொண்டு தீர்வை நோக்கி செல்வது கடினமான விடயமாகும். எவ்வாறாயினும் இன்று வியாழக்கிழமை எல்லை நிர்ணயம் தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவிக்கப்படும் என்று நம்புகின்றேன். ஆனால் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உயர் நீதிமன்றத்திற்கான அறிவிப்பின் பிரகாரம் ஒரு மாதத்திற்குள்ளாவது வர்த்தமானி அறிவித்தல் வரவேண்டும்.
அடுத்த வாரம் அளவில் அதிகரிக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு அமைவாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. எவ்வாறாயினும் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கான களத்தை தயார் படுத்துவதில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாக செயற்படும். ஆனால் அதில் போட்டியிட வேண்டியதும் மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தினதும் ஏனைய அரசியல் கட்சிகளினதும் கடமையாகும்.
அனைத்து விடயங்களையும் நிறைவு செய்து விட்டு இன்று வர்த்தமானி வெளியிடப்பட்டால் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த முடியும். தேவையான நிதி மற்றும் வளங்கள் குறித்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment