கபீர் ஹாஷிம் + முஸ்லிம் கவுன்சில் துரிதமுயற்சி - 80 மாணவர்களின் பெறுபேறு வெளியாகிறது..!!
தாம் வசிக்கும் மாவட்டத்திற்கு வெளியே கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எழுதியமமைக்காக பரீட்சைப்பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த மாணவர்களுக்கான பெறுபேறுகளை வெளியிட பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சி பொதுச்செயலாளருமான கபீர் ஹஷீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட துரித முயற்சிகளுக்கமைய இடைநிறுத்தப்பட்டிருந்த மேற்படி பெறுபேறுகளை வெளியிட பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பரீட்சைப்பெறுபேறுகள் வெளியிடப்படாமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த 2016 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பிரிவில் க.பொ.த.உயர்தரப்பரீட்சை எழுதிய இம்மாணவர்களின் பெற்றோர்கள் இவ்விடயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
பரீட்சைப்பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருந்த இம்மாணவர்களின் பெற்றோர்களின் பிரதிநிதிகளுடனும் அமைச்சர் கபீர் ஹஷீமுடனும் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் பல நாட்களாக உரிய தகவல் மற்றும் ஆவணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை (31)ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் ஊடாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களின் பிரதிநிதிகளை தனது அமைச்சுக்காரியாலயத்தில் சந்தித்த அமைச்சர் கபீர் ஹஷீம் ஏற்கனவே நடத்தப்பட்ட இராஜதந்திர புரிந்துணர்வு முயற்சிகளின் விளைவாக எட்டப்பட்டிருந்த முடிவுகளுக்கமைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் பரீட்சை ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார ஆகியோருடன் பெறுபேறுகளை வெளியிடும் விடயமாக இறுதியாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின் பெற்றோர் பிரதிநிதிகளுக்கு பெறுபேறுகளை வெளியிடப்படும் அறிவிப்பை உறுதியாக வழங்கினார்.
இதற்கிணங்க பாதிக்கப்பட்டிருந்த 80 வெளிமாவட்டப் பாடசாலைகளின் மாணவர்களுக்கும் அவர்களுக்குரிய பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை ஆணையாளர் மேற்கொண்டுள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட முன் உரிய மாணவர்களுக்கான ஆவணங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 8,9 ஆம் திகதிகளில் ஒரு பகுதியினருக்கும் ஏனையோருக்கு பெப்ரவரி மூன்றாம் வாரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இம்மாணவர்களுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளி பரீட்சை எழுதிய மாவட்டத்தின் பட்டியலுக்குட்படுத்தப்படமாட்டா து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமானதால் உடல் உளத்தாக்கங்களுக்கு மட்டுமன்றி பரீட்சைப்பெறுபேறு மீளாய்வு இரண்டாவது முறை பரீட்சை எழுதும் வாய்ப்புக்களுக்கான கால அவகாசம் போன்ற பல பிரச்சினைகளுக்கும் தமது பிள்ளைகளுக்கு உரிய நியாயங்களைப் பெற்றுத்தரப்பட வேண்டுமெனவும் இப்பெற்றார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட சகல முஸ்லிம் தமிழ் மாணவர்களுக்கும் சட்ட வரம்புகளுக்குட்பட்ட விதத்தில் உரிய நியாயங்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்திலும் சகல உதவிகளையும் செய்யத்தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இவ்விடயத்தில் நேரடியாகவே களத்தில் இறங்கி செயற்பட்ட அமைச்சர் கபீர் ஹாஷிம் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் உட்பட இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்ட பிரதியமைச்சர் ரவீந்திர சமரவீர ஏனைய அமைச்சர்களுக்கும் அரசியல் தரப்புக்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் தமதும் தமது பிள்ளைகளினதும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் பாதிக்கப்பட்ட பெற்றார்களின் பிரதிதிகள் தெரிவித்தனர்.
May allah grand your precious rewards
ReplyDelete