விமல் வீரவன்சவின் பிரஜா உரிமையை 7 வருடங்களுக்கு நீக்க முயற்சி - தே.சு.மு.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை சிறையிலடைத்து ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டு செல்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அத்துடன் விமல் வீரவன்சவை மூன்று மாதங்கள் தொடர்ந்து சிறையிலடைத்து அவரின் பிரஜா உரிமையை இல்லாமலாக்குவதற்கு திட்டமிடப்படுகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதே சாந்த குணதிலக்க தெரிவித்தார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
எமது கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவை அரசியல் நோக்குடன் கைது செய்து இன்று 3 வாரங்கள் ஆகின்றன. அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் தேசிய தலைவர்களை கைதுசெய்து அவர்களை அடக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் நாட்டின் தேசிய தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச போன்ற தலைவர்களை சிறையிலடைத்து ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டு செல்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு தேசிய தலைவர்களை கைதுசெய்து மீண்டும் 83- 88 யுகத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றது. அது ஒருபோதும் நடைபெறாது. அந்த யுகம் முடிந்துவிட்டது. அத்துடன் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பெரும்பன்மையானவர்கள் பிணையிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக நிச்சயமாக வழக்கு தொடுக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டால் அவர்களை விசேட நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளுமாறு நாங்கள் கேட்போம் எனத் தெரிவித்து பாராளுமன்ற ஹன்ஸாட்டில் பதிவாகியுள்ளது.
அப்படியாயின் அசோக அபேசிங்கவின் கருத்து தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் சொல்வார்களா என கேட்கின்றோம். அத்துடன் வாகன துஷ்பிரயோகம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதாக தெரிவிக்கின்றனர். விமல் வீரவன்ச வாகன துஷ்பிரயோகத்துக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காகவே சிறையிலடைக்கப்பட்டுள்ளார். ஆனால் மத்திய வங்கி மோசடியில் தொடர்புபட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த குற்றப்பத்திரமும் இல்லை.
அத்துடன் நாட்டின் சட்டப்படி ஒருவர் 3 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டால் 7 வருடங்களுக்கு அவரின் பிரஜா உரிமை இல்லாமல் போகும். அதன் அடிப்படையில் விமல் வீரவன்சவை 3 மாதங்கள் சிறையிலடைத்து அவரின் பிரஜா உரிமையை இல்லாமலாக்குவதன் மூலம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் வைக்கவே இவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். தேசிய சுதந்திர முன்னணியின் எத்தனை பேரை கைதுசெய்தாலும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஏகாதிபத்திய போக்குக்கு எதிரான எமது போராட்டத்தை உயிரைப் பணயம் வைத்தேனும் தொடர்ந்து மேற்கொள்வோம்.
எனவே நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாகவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது ஏகாதிபத்திய போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தேசிய தலைவர்களை கைதுசெய்து சிறையிலடைக்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது. அதனால் அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக எதிர்காலத்தில் இலட்சக்கணக்கான மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் என்றார்.
Post a Comment