5 ஆண்டுகளில் 13,000 பேருக்கு தூக்கு தண்டனை
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள சிறைச்சாலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13,000 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச தன்னார்வ அமைப்பான அம்னெஸ்டி தெரிவித்துள்ளதாவது:
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. அதையடுத்து, 2011 மற்றும் 2015-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாரத்துக்கு குறைந்தபட்சம் 50 பேராவது கைது செய்யப்பட்டு, அடித்து, துன்புறுத்தப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டனர். அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13,000 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தூக்கு தண்டனை அனைத்தும் டமாஸ்கஸ் அருகே ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள சையதுநயா சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டன.
தூக்கிலிடப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதிபர் பஷார் அல் அஸாத் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் ஆவர்.
கைதிகளில் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து வசதி உள்ளிட்டவற்றை வழங்காமல் தொடர்ச்சியான சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று அம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாவலர்கள், கைதிகள், நீதிபதிகள் உள்ளிட்ட 84 நேரடி சாட்சியங்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த அமைப்பு, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் சிரியாவில் காவலில் வைக்கப்பட்டிருந்த 17,700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 13,000 பேர் தூக்கிலிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
Post a Comment