முஸ்லிம் திருமணத்தில், மணமகளின் கையொப்பம் வேண்டும் - 3 பெண் அமைப்புக்கள் போர்க்கொடி
பெண் காதிகள் நியமனம், பெண் விவாகப் பதிவாளர் நியமனம் என்பனவும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் உலமாக்களுடன் கலந்துரையாடி இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் மூன்று முன்னணி முஸ்லிம் பெண்கள் அமைப்புகள், முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளன.
முஸ்லிம சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுடனான இந்தச் சந்திப்பில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் –புத்தளம், முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணி – கொழும்பு, ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் –காத்தான்குடி ஆகிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த 8 பெண் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர்.
இச்சந்திப்பில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இளவயது திருமணம் தடை செய்யப்பட வேண்டுமெனவும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கணவனின் கொடுமைகளால், தவறினால் 'பஸஹ்' செய்து கொள்ளும் பெண்களுக்கும் நியாயமான காரணங்களின்றி கணவர் தலாக் சொல்லப்படும் பெண்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
திருமணப் பதிவின் போது மணமகளின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதும் அவர்களது கோரிக்கையாக இருந்தது. முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணி தனது ஆய்வறிக்கையொன்றினையும் அமைச்சரிடம் சமர்ப்பித்தது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான சிபார்சுகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அறிக்கையில் 5 ஆயிரம் பேரின் கையொப்பங்களும் பெறப்பட்டிருந்தன.
புத்தளத்தை தலைமையகமாகக் கொண்டியங்கும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் இளவயது திருமணம் தொடர்பாக மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அடங்கிய நூலொன்றினையும் அமைச்சரிடம் கையளித்தது.
அந்நூலில் 350 இளவயது திருமண ஆய்வுகள் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த 350 திருமணங்களிலும் 108 குடும்பங்கள் பிரிந்திருந்தினர். விவாகரத்து பெற்றிருந்தனர். இளவயது திருமணத்தினால் ஏற்படும் கருச்சிதைவு மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன.
காத்தான்குடியைச் சேர்ந்த ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் கடந்த 6 மாத காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த இளவயது திருமணங்கள், அத் திருமணங்களில் நிலவிய பிரச்சினைகள், அப்பகுதி காதி நீதிமன்றங்களின் பிரச்சினைகள் தொடர்பிலான ஆய்வு அறிக்கையொன்றினையும் அமைச்சரிடம் கையளித்தது.
மனைவி, பிள்ளை தாபரிப்பு பணம், கைக்கூலி தொடர்பாக நீதிவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றுக்கு காதி நீதிபதிகளினால் அனுப்பி வைக்கப்படும் வலியுறுத்தற் கட்டளைகளினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் பெண் பிரதிநிதிகள் அமைச்சருக்குத் தெளிவூட்டினார்கள்.
பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி திருத்தங்கள் ஷரீஆவுக்கும் முஸ்லிம் கலாசாரத்துக்கும் அமைவாக மேற்கொள்வதற்கு ஆவன செய்யப்படும் என உறுதியளித்தார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினது அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீனும் கலந்து கொண்டிருந்தார்.
appady siyaa vitta ceeraliyum
ReplyDeleteislamiaya muraipadi walnthal....ithalam ethakku.............
ReplyDeleteகைக்கூலி வாங்காவிட்டால்தான் கல்யாணம் கட்டுவோம் என் சொல்லி இருக்கலாம்.
ReplyDelete