அம்பாறையில் 340 தொல்பொருள் அமைவிடங்கள் - களத்தில் ஜனாதிபதி, ஹசன் அலி விமர்சனம்
-ARA.Fareel-
தொல்பொருள் திணைக்களம் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 340 தொல்பொருள் அமைவிடங்களை, காணிகளை இனங்கண்டுள்ளது. அவ்விடங்களுக்கு விரைவில் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைவாக இத்தொல்பொருள் பிரதேசங்களுக்கு சிவில் பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பினை வழங்கவுள்ளனர்.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலினையடுத்து அம்பாறை மாவட்டத்திலுள்ள தொல்பொருள் பிரதேசங்கள் விரைவில் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படவுள்ளன என தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் "விடிவெள்ளி"க்குத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் இனங்காணப்பட்டுள்ள தொல்பொருள் அமைவிடங்கள் பல அழிவுக்குள்ளாகி வருகின்றன.
எனவே, இப்பகுதிகளுக்கு எல்லையிட்டு பாதுகாக்கவேண்டியது தொல்பொருள் திணைக்களத்தின் கடமையாகும். ஜனாதிபதியும் இது விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.
இனங்காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு விரைவில் பாதுகாப்புக்காக சிவில் பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் அனுப்பிவைக்கப்படுவார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தொல்பொருள் பிரதேசங்கள் பாதுகாக்கப்படும். பாதுகாப்புக் கடமைகளில் சிவில் பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்திட்டத்தை தொல்பொருள் பிராந்திய அலுவலகங்கள் பிராந்திய ரீதியில் முன்னெடுக்கும் என்றார்.
இதேவேளை, தொல்பொருள் திணைக்களத்தினால் கிழக்கில் இனங்காணப்பட்டுள்ள தொல்பொருள் அமைவிடங்களில் சிவில் பாதுகாப்புப் படையினரையும், பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவது அப்பிரதேச மக்களிடையே பீதியை ஏற்படுத்தும். நாட்டில் நல்லிணக்கம் உறுதி பெறும்வரை இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
கிழக்கில் இனங்காணப்பட்டுள்ள தொல்பொருள் அமைவிடங்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தொல்பொருட்கள் கட்டாயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அது தேசிய சொத்தாகும். ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ சொந்தமானதல்ல. அப்பிரதேசத்தில் படையினரை நிறுத்துவதை சுமார் ஐந்து வருட காலத்துக்காவது காலதாமதப்படுத்த வேண்டும்.
தொல்பொருள் அமைவிடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான மாற்றுக்காணி வழங்கப்பட வேண்டும்.
காணிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நீதிமன்றினை நாடாது திணைக்கள மட்டத்திலே அவற்றைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் அரசாங்கம் தீர ஆலோசித்து தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சரையும் கலந்துரையாடியே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.
Post a Comment