UNP யில் முஸ்லிம் பிரிவை, ஸ்தாபிக்க முயற்சி
ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லிம் பிரிவை ஸ்தாபிக்கும் முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் மற்றும் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கிடையேயான ஆரம்பக்கட்ட சந்திப்பு நேற்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.சஹாப்தீன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்), வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பீ.சயீது சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிஹால் பாறூக் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.பைறூஸ் உள்ளிட்டோர் அந்தந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை முஸ்லிம்களில் சுமார் 70 வீதமானோர் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் நிலையில் அக்கட்சியினூடாக முஸ்லிம்களும் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டே இவ்வாறானதொரு கட்டமைப்பை உருவாக்குவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினரும் குருணாகல் மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளருமான எஸ்.சஹாப்தீன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சோல்பறி திருத்தத்திற்காக 1946 ஆம் ஆண்டு நாட்டில் கட்சியொன்றை உருவாக்கும் தேவை ஏற்பட்டது. இதன்போது ரி.பி.ஜாயா தலைமையிலான அகில இலங்கை இலங்கை முஸ்லிம் லீக், சேர் ராஸிக் பரீத் தலைமையிலான இலங்கை சோனகர் சங்கம் என்பன டீ.எஸ்.சேனாநாயக்க மற்றும் எஸ்.டபிள்யு பண்டார நாயக்க போன்றோருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினர். அத்துடன் டி.பி.ஜாயா கட்சியின் ஸ்தாபக உப தலைவராகவும் சேர் ராஸிக் பரீத் உள்ளிட்ட இன்னும் பல முஸ்லிம் பிரதிநிதிகள் கட்சியின் செயற்குழுவிலும் இருந்தனர். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பம் முதல் இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகள் ஐ.தே.க.வுடன் பின்னிப்பிணைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த சில சந்தர்ப்பங்களில் தேர்தல் காலங்களில் முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டிணைவதனால் ஐ.தே.க. ஊடாக முஸ்லிம் பிரதிநிதிகள் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் இதனை சீர் செய்வதற்கு மாவட்ட ரீதியில் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் முகமாக நாம் ஐ.தே.க.வில் ஒரு முஸ்லிம் பிரிவொன்றை கட்டமைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கிறோம்.
ஆரம்பகட்டமாக ஐ.தே.க. பிரதிநிதித்துவம் பெறப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் தலா ஒவ்வொரு பிரதிநிதிகளை அழைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டோம்.
அடுத்தவாரமளவில் ஐ.தே.க.முஸ்லிம் எம்.பி.க்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கியதாக கலந்துரையாடலொன்றை ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்த தீர்மானித்திருக்கிறோம். அங்கு மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களுக்கமைய எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
-விடிவெள்ளி-
Post a Comment