SLTJ யின் தீவிரவாத, எதிர்ப்பு மாநாட்டின் தீர்மானங்கள்
• ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த காலங்களில் நாடு பூராகவும் மேற்கொண்ட தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் வாயிலாக இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கும் நிலையில் இல்லை என்பதையும் மனித நேயத்தை விதைத்து இனங்களுக்கிடையே பரஸ்பரம் தொடர்புகளை ஏற்படுத்தி மனிதநேயங்களை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை இத்தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ளது.
• நாட்டில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக குறிப்பிட்ட சில இனவாதிகளால் பரப்பப்படும் கருத்துக்களை தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் வாயிலாக அந்நிய மக்களுக்கு, முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் இல்லை என்பதையும் தீவிரவாத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்பதையும் நிறுபித்து வந்துள்ளோம். அதே வேளை இஸ்லாம் மற்றும் அல்குர்ஆன் விடயத்தில் இனவாதிகளோ அல்லது வேறு எவருமோ முறைப்படி கேள்விகள் தொடுப்பார்களாயின் அதற்கு தக்க முறையில் பதில் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இதைத்தவிர்த்து அவர்களின் கேள்விகளை கிண்டலடிப்பதை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதை இம்மாநாடு வண்மையாகக் கண்டிக்கின்றது.
• இலங்கை நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கை முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு, உரிமைகள், எதிர்காலம், அபிவிருத்தி, கல்வி தொடர்பில் விஷேட கவனமெடுக்க வேண்டிய உத்தேச யாப்புத் திருத்தங்களில் தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வு ஆகிய அம்சங்கள் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் ஆபத்தானவையே.
இதிலும் குறிப்பாக உத்தேச யாப்பு மாற்றத்தின் அடிப்படை அம்சமான தேர்தல் முறை மாற்றம் இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது. வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு உத்தேச தேர்தல் மாற்ற முறையாக கூறப்படுகின்ற கலப்பு தேர்தல் முறை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தப்போவதில்லை. 70 வீதமான தொகுதிவாரி முறையுடன் கூடிய உத்தேச புதிய தேர்தல் முறை பெருமளவில் முஸ்லிம்களைப் பாதிக்கின்றது.
பெரும்பாலும் அம்பாறையின் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை தொகுதிகளில் இருந்தும் திருகோணமலையின் மூதூர் தொகுதியிலிருந்தும் மொத்தமாக நான்கு முஸ்லிம்களே தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். மட்டக்களப்பு, வன்னி, கொழும்பு மத்தி, கண்டி, பேருவலை போன்ற பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் வழமையான முஸ்லிம் பிரதிநிதித்துவமும் உத்தேச தேர்தல் மாற்று முறையின் பின் கிடைக்கப் போவதில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் ஊடாக இருபத்தி இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துக் கொண்டிருப்பது இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மிகப் பாதுகாப்பானதாகும். இதற்கு மாற்றமான மேற்படி திருத்தங்களை இம்மாநாடு கண்டிக்கின்றது.
• கடந்த சில வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். உயிர் பாதுகாப்பின்மை (அளுத்கம சம்பவம்) தொழில் செய்வதற்கான உரிமை மறுக்கப்படல் (நோலிமிட், ஹாக்கோர்ட்ட தீ வைப்புச் சம்பவங்கள்) கலாச்சாரத்தை வெளிப்படுத்த முடியாமை அபாய, ஹிஜாப் உடைகள் மறுக்கப்படல், முஸ்லிம் மாணவிகளின் பாடசாலை சீருடை மறுக்கப்படல், மத உரிமை பின்பற்றுவதற்கான தடை (பள்ளிவாயல்கள் உடைப்பு) பல்லின கலாசாரத்தை மறுத்தல், முஸ்லிம்களை வந்தேறு குடிகள் எனக் கூறி முஸ்லிம்களின் பூர்வீக உரிமையை மறுத்தல், முஸ்லிம்கள் தனியார் சட்டம், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை கேள்விக்கு உட்படுத்த முயற்சி செய்தல், குர்ஆன் அவமதிப்பு, ஹலால் உணவு முறையில் கைவைக்க முனைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை அண்மைக்காலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
மேற்சொன்ன முஸ்லிம்கள் தற்போது நாடு முழுக்க எதிர்நோக்கும் பிரச்சினைகள் இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தில் யாப்பு ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்ட உரிமைகளாகும்.
மேற்படி யாப்பில் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் உறுப்புரிமை 12ல் இனம், மொழி, மதம், சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறப்பியல் காரணமாக எந்தப் பிரஜைக்கும் பாரபட்சம் காட்டப்படலாகாது.
உறுப்புரை 14 (உ) வில் தனியாக அல்லது மற்றவருடன் சேர்ந்து பகிரங்கமாகவேனும் அல்லது அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ நம்பிக்கையோ வழிபாட்டிலும் போதனையிலும் ஈடுபட வெளிக்காட்ட சுதந்திரம் உண்டு எனக் கூறுகிறது.
மேற்படி யாப்பில் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டும் கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்சொன்ன பிரச்சினைகளை முஸ்லிம்கள் மோசமாக எதிர்நோக்கினர். இதன்மூலம் எந்தவொரு காலத்திலும் முஸ்லிம்களின் தனியான இருப்பை, சுதந்திரத்தை எந்தவகையிலும் கேள்விக்குறியாக்காமல் இவ்வரசு செயற்பட வேண்டும் என இம்மாநாடு கோரிக்கை வைக்கின்றது.
• வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இனப்பரம்பலுக்கு ஏற்ற காணியின்மை, நிர்வாகத்தில் பாரபட்சம் காட்டல், இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படாமை, முஸ்லிம் பிரதேச செயலகங்களில் நிலவும் எல்லைப் பிரச்சினைகள், அரச நிர்வாக உயர் பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படல், வடக்கு கிழக்கு இணைவதால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தனியான இனத்திற்குரிய சகல கூறுகளையும் கொண்ட இலங்கை முஸ்லிம்களை சில தமிழ் தலைமைகள் குழுவாக காட்ட முயலும் ஆதிக்க மனநிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பட்டியலிடலாம்.
ஆக புதிய யாப்பு மாற்ற விடயத்தில் முன் மொழிவுகளை முன்வைக்கின்ற போது மேற்சொன்ன முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொள்ளும் வகையில் முன்வைக்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அம்பரை மட்டக்களப்பு மாவட்டங்கள் நடத்திய 28 .01.2017 அன்று தீவிரவாத எதிர்ப்பு மானட்டில் மேலே உள்ள தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இச் செய்தியை உங்களின் ஊடகத்தில் பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டுகிரேன்.
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
ஊடக பொறுப்பாளர் - ரிஸா யூசூப்
Post a Comment